உலகம்

மெட்டா நிறுவனத்தின் புதிய அதிரடி: 'மியூஸ்' (Muse) ஏஐ ஏஜென்ட் அறிமுகம்!

தனிப்பட்ட தகவல்கள் விளம்பரதாரர்களுக்கு பகிரப்படாது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

பயனர்களின் அன்றாட டிஜிட்டல் வேலைகளை மனிதர்களைப் போலவே தானே முன்னின்று செய்யும் ‘மியூஸ்’ என்ற புதிய தனிநபர் செயற்கை நுண்ணறிவு ஏஜென்ட்டை மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

'மியூஸ் ஸ்பார்க்' என்ற அதிநவீன மொழி மாதிரியால் இயக்கப்படும் இந்தச் சேவை, முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மியூஸ் ஏஐ-ன் முக்கிய அம்சங்கள் மற்றும் செயல்பாடுகள்

மியூஸ் ஏஐ என்பது மின்னஞ்சல், காலண்டர், ஆன்லைன் பேமெண்ட், உடற்பயிற்சி, ஸ்மார்ட் ஹோம் மற்றும் இ - காமர்ஸ் போன்ற அனைத்து முக்கிய செயலிகளுடனும் தடையின்றி இணைந்து செயல்படும் ஒரு மேம்பட்ட ஏஐ தொழில்நுட்பமாகும்.

பயனர்களின் அனுமதியோடு மின்னஞ்சல் அனுப்புவது, பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, படிவங்களை நிரப்புவது, சமையல் குறிப்புகளை மளிகைப் பொருட்களின் பட்டியலாக மாற்றுவது மற்றும் ஆன்லைன் செக்அவுட்டில் கட்டணங்களைச் செலுத்துவது போன்ற டிஜிட்டல் பணிகளை இது தானாகவே செய்கிறது.

மேலும், பயனர்கள் தங்களுக்குத் தேவையான செயலிகளை மட்டும் இதனுடன் இணைத்துக் கொள்வதோடு, இந்த ஏஐ ஏஜென்ட்டிற்கு தங்களுக்குப் பிடித்த பெயர் மற்றும் அவதாரத்தை அமைத்துக் கொள்ளும் வசதியையும் இது வழங்குகிறது.

தரவு பாதுகாப்பு மற்றும் தனியுரிமை

மெட்டா நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்காகப் பல அடுக்கு பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது.

இதன் படி, மியூஸ் ஏஐ தொழில்நுட்பமானது பாதுகாப்பான ‘மியூஸ் செக்யூர் விஎம்’ என்ற தனிநபர் மெய்நிகர் கணினி மற்றும் பிரவுசரில் மட்டுமே இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், சிஸ்டம் மட்டத்தில் மியூஸிடமிருந்து முற்றிலும் தனித்து இயங்கும் 'சென்டினல்' என்ற மற்றொரு பாதுகாப்பு ஏஜென்ட்டும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அது பயனர்களின் பாஸ்வேர்டுகள் மற்றும் பேமெண்ட் விவரங்களை மியூஸ் ஏஐ நேரடியாக அணுகாதவாறு பாதுகாக்கிறது.

இவற்றுடன், பயனர்கள் மேற்கொள்ளும் அரட்டைகள் மற்றும் பகிரப்படும் தனிப்பட்ட தகவல்கள் எக்காரணம் கொண்டும் விளம்பரதாரர்களுக்கு பகிரப்படாது என்றும் மெட்டா நிறுவனம் உறுதியளித்துள்ளது.

கிடைக்கும் தளங்கள் மற்றும் கட்டண விவரங்கள்

இந்த ஏஐ ஏஜென்ட் தற்போது வாட்ஸ்அப் செயலியில் கொண்டு வரப்படுகிறது. மேலும், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் செயலிகள் மற்றும் muse.ai இணையதளம் மூலமும் இதை அணுகலாம். மெட்டா ஸ்மார்ட் கண்ணாடியிலும் விரைவில் இது இணைக்கப்படவுள்ளது.

இது இலவசமாகப் பயன்படுத்தக் கிடைக்கிறது. எனினும், பயன்பாடு அதிகரிக்கும் போது சந்தா கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இதற்காக 'மியூஸ் பவர்' மாதத்திற்கு ரூ.1902 மற்றும் 'மியூஸ் மேக்சிமம்' மாதத்திற்கு ரூ.9507 ஆகிய இரண்டு கட்டணத் திட்டங்களை மெட்டா அறிவித்துள்ளது.

இலவச பயன்பாட்டு அளவு முடிவடைவதைக் கண்காணிக்க இதில் 'யூசேஜ் மீட்டர்' வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT