வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் ஹசீனா, மாணவர்கள் போராட்டம் வன்முறையாக வெடித்ததால் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. கடந்த 2024-ம் ஆண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அதன்பின் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இந்த அரசு ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகளை தொடர்ந்தது. இதில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. இந்த வருடம் தொடக்கத்தில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் பிஎன்பி கட்சித் தலைவர் தரிக் ரஹ்மான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். இவர் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா ஆவார். தரிக் ரஹ்மன் பல வருடங்களாக வங்கதேசத்தில் இருந்து வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். இடைக்கால அரசு தேர்தல் தேதி அறிவித்ததும், உடல்நிலை மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த தனது தாயார் கலிதா ஜியாவை பார்ப்பதற்காக சொந்த நாடு திரும்பினார். பின்னர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து, வெற்றியும் பெற்றார்.
இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்குள் சொந்த நாடு திரும்புவேன் என்று ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார். அப்போது நான் கைது செய்யப்படலாம், கொலை கூட செய்யப்படலாம் எனத் தெரிவித்துள்ளார். இருப்பினும், நான் சென்றே ஆக வேண்டும். எனது கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் கடும் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். மரணம் நேரிடுமானால், அது என் சொந்த மண்ணிலேயே நிகழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அங்குதான் என் பெற்றோர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். அங்குதான் அவர்களின் ரத்தம் சிந்தப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
78 வயதான ஷேக் ஹசீனா 20 வருடம் வங்கதேச பிரதமராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசத்தின் போர் குற்ற நீதிமன்றம் ஷேக் ஹசீனாவுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மரண தண்டனை விதித்தது. ஆனால், ஷேக் ஹசீனா தனது மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வங்கதேசம் தொடர்ந்து இந்தியாவை வலியுறுத்தி வருகிறது. இந்தியாவில் இருக்கும் ஷேக் ஹசீனா, முதன்முறையாக சொந்த நாடு திரும்புவது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.