பேச்சுவார்த்தை உடைந்ததை தொடர்ந்து, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வாட் பகுதியிலிருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி சுமார் 275 கிலோமீட்டர் தூர பேரணி தொடங்கியது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், நாட்டின் முன்னணி அரசியல் தலைவருமான இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் ஆதரவாளர்கள் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பிரம்மாண்ட பேரணியைத் தொடங்கியுள்ளனர்.
முன்னதாக, இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த பேரணியைத் தவிர்ப்பதற்காக பாகிஸ்தான் அரசும் பிடிஐ கட்சியும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஆனால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை நேரடியாகச் சந்தித்து ஆலோசிக்க பிடிஐ தலைவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், அவருக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அரசு நிராகரித்தது. இதன் காரணமாக பேச்சுவார்த்தை முற்றிலும் தோல்வியில் முடிவடைந்தது.
பேச்சுவார்த்தை உடைந்ததை தொடர்ந்து, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள லக்கி மார்வாட் பகுதியிலிருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி சுமார் 275 கிலோமீட்டர் தூர பேரணி தொடங்கியது. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் சிவப்பு மற்றும் பச்சை நிற கட்சி கொடிகளை ஏந்தியபடி பேரணியில் பங்கேற்றுள்ளனர். பேரணியைத் தடுக்க முயன்ற பாதுகாப்பு படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பல இடங்களில் கல்வீச்சும் தடியடியும் நடந்துள்ளன.
போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக பாகிஸ்தான் அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இஸ்லாமாபாத்தின் முக்கிய அணுகுசாலைகள், நாடாளுமன்ற வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் பிரம்மாண்ட ஷிப்பிங் கன்டெய்னர்களை அடுக்கி பாதைகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் நகரின் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
73 வயதான இம்ரான் கான் கடந்த 2023 ஆகஸ்ட் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக அவரது வலது கண்ணில் பார்வைப் திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். கிரிக்கெட் மைதானத்திலிருந்து அரசியலுக்கு வந்து பிரதமரான இம்ரான் கான் மீது 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, ஆனால் இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். பேரணி தொடர்வதால் பாகிஸ்தானில் மீண்டும் அரசியல் கொந்தளிப்பும் பதற்றமும் அதிகரித்துள்ளது.