உலகம்

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு-வணிக வளாக இடிபாடுகளில் தீவிர மீட்புப் பணி!

கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தென்மேற்கு ஜப்பானின் கியூஷு பிராந்தியத்தில் உள்ள குமாமோட்டோ மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்குப் பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்கத்தின் அளவு:

நேற்று பிற்பகல் குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு செய்யப்பட்ட இந்த நிலநடுக்கம், ஜப்பானிய நில அதிர்வு அளவுகோலில் மிக உயர்ந்த அளவான 7-ஐத் தொட்டது. நிலநடுக்கத்தின் தீவிரத்தால் வீடுகள், கட்டடங்கள், பாலங்கள் மற்றும் வீதிகள் பலத்த சேதமடைந்தன. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சில மணிநேரங்களிலேயே திரும்பப் பெறப்பட்டது.

எரிவாயு வெடிப்பு:

கஷிமா நகரில் உள்ள பிரபலமான 'ஏயோன் மால்' வணிக வளாகத்தில், நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்குள் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது. சமையல் எரிவாயு கசிவு காரணமாக இந்த வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் எனக் சந்தேகிக்கப்படுகிறது. இதன்காரணமாக, வணிக வளாகத்தின் இரண்டாம் தளம் இடிந்து விழுந்தது.

இங்கு நிகழ்ந்த விபத்தில் 20 வயதுடைய இரு பெண்கள் உட்படப் பல உயிரிழப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் சிலர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுவதால், மீட்புக் குழுவினர் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், யாட்சுஷிரோ நகரில் உள்ள நிப்பான் பேப்பர் தொழிற்சாலையின் புகைபோக்கி சரிந்து விழுந்ததில் பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

ஜப்பான் பிரதமரின் அறிவிப்பு:

இதுகுறித்து ஜப்பான் பிரதமர் சனே தாகைச்சி, நிலநடுக்கத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பதை அரசு உறுதி செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இடிபாடுகளுக்குள் இன்னும் பலர் உதவிக்காகக் காத்திருக்கிறார்கள். இது உண்மையிலேயே நேரத்திற்கு எதிரான ஓட்டம். சாத்தியமான அனைத்து வளங்களையும் பயன்படுத்தி ஒவ்வொரு உயிரையும் காப்பாற்ற அரசு தீவிரமாகச் செயல்படும். என தெரிவித்துள்ளார்.

களத்தில் 4,600 மீட்புப் பணியாளர்கள்:

தற்காப்புப் படை , காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையைச் சேர்ந்த '4,600-க்கும் மேற்பட்ட வீரர்கள்' மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுமார் '2,600,000 மக்கள்' பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 450-க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் 9,000-க்கும் அதிகமான மக்கள் தங்கியுள்ளனர்.

நிலநடுக்கப் பகுதியில் வெப்பநிலை '35°C' வரை உயர்ந்துள்ளதால், முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு மின் இயற்றிகள் , ஏர்-கண்டிஷனர்கள், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் தடங்கலின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு:

கியூஷு ஷிங்கான்சென் புல்லட் ரயில் சேவைகள் தண்டவாளச் சேதத்தால் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. 36,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறைக்கடத்தி (Semiconductor) உற்பத்தி நிறுவனமான TSMC மற்றும் ஹோண்டா போன்ற முன்னணி நிறுவனங்கள் தங்களது உற்பத்தி அலகுகளின் செயல்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

அடுத்த சில நாட்களுக்குப் பலமான தொடர் நில அதிர்வுகள் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஜப்பான் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT