மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான 'லாஞ்ச்பேட்' என்ற 387 அடி நீளமுள்ள $300 மில்லியன் மதிப்பிலான சூப்பர்யாட் கடலில் நடுவழியில் நின்ற சிறிய படகு ஒன்றிற்கு உதவவில்லை என்ற குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அலாஸ்காவின் பீட்டர்ஸ்பர்க் மற்றும் ஜூனோ நகரங்களுக்கு இடையே கடலில் பயணித்த 21 அடி நீளமுள்ள சிறிய படகில் திடீரென எரிபொருள் தீர்ந்துவிட்டது. படகில் இருந்தவர்கள் உதவி கேட்கவே, அமெரிக்கக் கடலோரக் காவல் படை அக்கம் பக்கத்தில் இருந்த கப்பல்களுக்கு உதவக் கோரி அவசர வானொலி செய்தி அனுப்பியது.
கப்பல் கண்காணிப்புத் தரவுகளின்படி, உதவி கோரிய படகிற்கு மிக அருகில் ஜூக்கர்பெர்க்கின் 'லாஞ்ச்பேட்' படகு தான் இருந்தது. ஆனால், அதிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சற்று தொலைவில் இருந்த 'Wilderness Legacy' என்ற சிறிய சொகுசுக் கப்பல், தகவலைப் பெற்றதும் விரைந்து வந்து சிறிய படகை மீட்டு ஃபாராகுட் பே பகுதிக்கு பாதுகாப்பாக இழுத்துச் சென்றது.
மீட்புப் பணியில் ஈடுபட்ட கப்பலின் கேப்டன், "ஜூக்கர்பெர்க்கின் அதிநவீன படகு அருகில் இருந்தும் உதவி செய்ய மறுத்துவிட்டது" என்று அறிவித்ததும், கப்பலில் இருந்த பயணிகள் அனைவரும் ஒருசேர கண்டனக் கூச்சலிட்டனர். கப்பலில் பயணித்த ஒருவர் புளூஸ்கை சமூக வலைதளத்தில், "ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவக் கிடைத்த வாய்ப்பை ஜூக்கர்பெர்க் தவறவிட்டுவிட்டார்" என்று பதிவிட, அது வைரலாகி பெரும் விமர்சனங்களை உருவாக்கியது.
இந்தச் சர்ச்சைக்கு பதிலளித்த ஜூக்கர்பெர்க் மற்றும் பிரிசில்லா சான் தம்பதியினரின் செய்தித் தொடர்பாளர் பிரையன் பேக்கர், சம்பவம் நடந்த நேரத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் அல்லது அவரது குடும்பத்தினர் யாட்டில் இல்லை. படகின் ஊழியர்கள் வேறு ரேடியோ அலைவரிசையைக் கண்காணித்துக் கொண்டிருந்ததால், அவசர அழைப்பை உடனடியாகக் கவனிக்கவில்லை.
அவர்கள் அந்தச் செய்தியைப் பார்த்து அறிவதற்கு முன்பே, மற்றொரு கப்பல் மீட்புப் பணிகளைத் தொடங்கிவிட்டது. மேலும், அந்தச் சிறிய படகு உடனடி பேராபத்தில் இல்லை என்பதால் சர்வதேசக் கடல்சார் சட்டங்கள் எதும் மீறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.