உலகம்

Iran | ஈரான் மீதான தாக்குதல் நடவடிக்கைகள் நிறைவு - மார்கோ ரூபியோ அறிவிப்பு

ஏவுகணைகள், ஆளில்லா விமானங்களின் தாக்குதலை இரண்டாவது நாளாக இடைமறித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்கா நிறைவு செய்துவிட்டது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார். அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து மீது ஏதேனும் புதிய தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்கு "பேரழிவை ஏற்படுத்தும்" பதிலடியை கொடுக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

முக்கியமான நீர்வழியில் ஏற்பட்ட மோதல்கள், போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், உத்தரவிடப்பட்டால் போர் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அமெரிக்க படைகள் தயாராக இருப்பதாக அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி கூறியதை தொடர்ந்து ரூபியோ இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

முக்கியமான வர்த்தக பாதையில் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடந்ததை தொடர்ந்து, ஈரான் "இன்னும் தொடங்கவே இல்லை" என்று அந்நாட்டின் தலைமை செயலாளர் கூறிய நிலையில், கப்பல்கள் ஜலசந்தி வழியாக அனுமதிக்கப்பட்ட பாதையில் இருந்து விலகினால் "கடுமையான பதிலடி" கொடுக்கப்படும் என ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படை கடற்படை எச்சரித்துள்ளது.

ஈரானில் இருந்து வந்த ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களின் தாக்குதலை இரண்டாவது நாளாக இடைமறித்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்தது. ஆனால், இந்த கூற்றை தெஹ்ரான் முற்றிலும் மறுத்துள்ளது.