இங்கிலாந்தில் பார்க்கிங் செய்யப்பட்டிருந்த கார் கண்ணாடி மீது ஒட்டப்பட்டிருந்த ரசீதை கிழித்து அதிகாரி மீது வீசிய நபருக்கு சுமார் 3 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 58 வயதான ஸ்டீபன் லாங் என்பவர் தனது காரை பார்க்கிங்கிறாக ஒதுக்கப்பட்ட எக்ஸ்செக்கர் குவே என்ற வாகன நிறுத்துமிடத்தில் இருந்து வெளியே நிறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக லாங்கின் கார் கண்ணாடி மீது பார்க்கிங் பணியில் ஈடுபட்டிருந்த பெண் அதிகாரி ஒருவர் அபராத ரசீது ஒன்றை ஒட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த லாங், தனது கார் கண்ணாடி மீது ஒட்டப்பட்ட ரசீதை கிழித்து பெண் அதிகாரி மீது வீசியுள்ளார்.
இந்த சம்பவம் முழுவதும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டதுடன், ரசீதை கிழித்து அதிகாரி மீது லாங் வீசிய நிகழ்வும், அதிகாரி அணிந்திருந்த பாக்கெட் கேமராவில் பதிவானது.
இதையடுத்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து, ட்ரூரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் லாங் ஆஜராகததால், அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட லாங் என்பவருக்கு, அபராத தொகையாக சுமார் 2.43 லட்சம் செலுத்தும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கூடுதல் கட்டணமாக ரூபாய் 12,693 செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுகுறித்து சமூக பாதுகாப்பு மற்றும் பொது சுகாதார துறைக்கான அமைச்சரவை உறுப்பினர் தாலியா மாரிங்டன் கூறுகையில், “குப்பைகளை வீசுவதும், தங்கள் பணியை செய்யும் ஒரு அதிகாரியிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
எங்கள் அதிகாரிகள் மீதான எந்தவொரு முறைகேட்டையும் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.