சீனாவில் வசித்து வரும் 49 வயதான நபர் ஒருவர், அந்நாட்டின் குழந்தை கொள்கை சட்ட விதிமுறைகளை மீறி, 13 குழந்தைகளை பெற்று அவர்களை பள்ளிகளில் படிக்க வைத்து வளர்த்து வரும் நிகழ்வு சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சீனாவின் குவாங்சி சுவாங் பகுதியில் உள்ள கின்சோ என்ற கிராமத்தில் 49 வயதான ஹூவாங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 27 ஆவது வயதில் 20 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
இவருக்கு முதலில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளனர். சீனாவில் 1970களின் பிற்பகுதியில் இருந்து 2015-ஆம் ஆண்டின் இறுதி வரை ஒரு குழந்தை கொள்கையை அந்நாட்டு அரசாங்க நடைமுறைப்படுத்தி இருந்தது.
2021-ஆம் ஆண்டில் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள சீன அரசாங்கம் அனுமதி அளித்தது. ஆனால் சீன அரசாங்கத்தின் நடைமுறையை மீறி, ஹூவாங் தொடர்ந்து குழந்தைகளை பெற்றுக் கொள்ள தொடங்கினார்.
முதலில் 2 பெண்கள் குழந்தைகளை பெற்றுக்கொண்டதை தொடர்ந்து, அடுத்தடுத்து 8 ஆண் குழந்தைகளுக்கு தந்தையாகிவுள்ளார் ஹூவாங்.
இதையடுத்து சீன அரசாங்க அதிகாரிகள், கருத்தடை கொள்கையை மீறியதற்காக ஹூவாங் மீது பல தண்டனைகளை விதித்தனர்.
இருப்பினும் அவர் தனது கொள்கையில் இருந்து பின்வாங்காமல், அடுத்து மேலும் 3 பெண் குழந்தைகளை பெற்று கொண்டார்.
இதுகுறித்து ஹூவாங் கூறுகையில், தனக்கு பல குழந்தைகள் இருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக கூறினார்.
மேலும் அவர், பிள்ளைகள் தன்னை பார்த்து அப்பா என்று அழைப்பதை கேட்பது, மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறு பல குழந்தைகள் பெற்றுக் கொண்டதன் மூலம், தனது முதிர்வயதில் தனிமையாக இருப்பதை உணரமாட்டேன் எனவும் அவர் கூறினார்.
இந்த குழந்தைகளை வளர்ப்பதற்காக தான் விவசாய வேலை பார்த்து வருவதாகவும், விவசாயத்தில் நெல் பயிரிட்டு வருவதன் மூலம், மாதந்தோறும் சுமார் 50,000 ரூபாய் வரை அரசாங்கம் மானியமாக அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 2016-ஆம் ஆண்டில் கட்டுமான தளத்தில் நடந்த ஒரு விபத்தில், தனது கால் மற்றும் இடுப்பில் கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும், அதன் விளைவாக சுமார் 14 லட்சம் ரூபாய் வரை செலவு ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.
தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக, நாள் முழுவதும் மாலை வரையிலும் வேலை செய்யும் சூழல் உள்ளதாகவும், அதனால் தனது கால் மற்றும் இடுப்பில் அதிகமான வலி ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
ஹூவாங்கின் 22 வயதான மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், அவரின் இரண்டாவது மகள் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
ஹூவாங்கின் குடும்பம் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வெளியானதை தொடர்ந்து, கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.