உலகம்

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த குற்றச்சாட்டில் மாலத்தீவு எதிர்க்கட்சி தலைவர் கைது

மாலத்தீவின் வெளியுறவு அமைச்சராக அப்துல்லா ஷாஹித் இருந்துள்ளார். 2028 தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிட தயாராகி வந்தார்.

சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் மாலத்தீவின் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல்லா ஷாஹித் கைது செய்யப்பட்டுள்ளார்.

64 வயதான அப்துல்லா ஷாஹித், மாலத்தீவு ஜனநாயகக் கட்சியின் (எம்டிபி) தலைவர் ஆவார்.

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் தந்த வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.

கைது

இதைத்தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) இரவு சுமார் 10 மணியளவில் தலைநகர் மாலேயில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் கைது செய்யப்பட்டார்.

மாலத்தீவு காவல்துறையின்படி, 18 வயதுக்குட்பட்ட ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ஷாஹித் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. வழக்கின் மேலதிக விவரங்களை வெளியிடவில்லை. விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்தது.

கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு, ஷாஹித் தன்னைப் பற்றிய தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று சமூக ஊடகங்களில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை அவதூறானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிபர் முய்சு

பாகிஸ்தானுடன் அதிபர் முகமது முய்ஸுவின் வளர்ந்து வரும் உறவுகளை ஷாஹித் விமர்சித்திருந்தார்.

அக்டோபர் 20 முதல் 22 வரை முய்ஸு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அரசியல் விவாதம் தீவிரமடைந்தது.

11 ஆண்டுகளில் ஒரு மாலத்தீவு அதிபர் பாகிஸ்தானுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 60வது ஆண்டு நிறைவு நாளில் இப்பயணம் நிகழ்ந்தது.

முய்ஸுவின் பயணத்தின் போது, ​​இரு நாடுகளும் இடையே சுகாதாரம், கல்வி, வர்த்தகம், விவசாயம், இணையப் பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய 20 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

அப்துல்லா ஷாஹித்

பாகிஸ்தானுடனான முய்ஸுவின் விரிவடைந்து வரும் உறவுகளை விமர்சித்த ஷாஹித், 2023 தேர்தலில் ஆட்சிக்கு வர உதவிய இந்திய எதிர்ப்புப் பிரச்சாரத்தை அதிபர் முய்சு மீண்டும் தொடங்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

2018 முதல் 2023 வரை இருந்த எம்டிபி அரசின் கீழ் மாலத்தீவின் வெளியுறவு அமைச்சராக அப்துல்லா ஷாஹித் இருந்துள்ளார்.

2023 ஜனாதிபதித் தேர்தலில் எம்டிபி கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, ஷாஹித் 2024 பிப்ரவரி 20 அன்று போட்டியின்றி எம்டிபி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2028 தேர்தலில் அதிபர் வேட்பாளராக போட்டியிட தயாராகி வந்த சூழலில் அவர் கைது நிகழ்ந்துள்ளது.

SCROLL FOR NEXT