உலகம்

பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.6 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்

மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் வீதிகளுக்கு வெளியே கூடினர்.

பனாமாவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தலைநகரில் கட்டிடங்களை உலுக்கியதுடன், மக்களை வெளியேற்றவும், அண்டை நாடான கொலம்பியா வரை அதிர்வுகளை உணர வழிவகுத்தது.

மத்திய மாகாணமான ஹெரேராவில் உள்ள பிடலோசா அரிபா என்ற தொலைதூர பகுதிக்கு தென்மேற்கே சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தின் தாக்கம் குறித்த தகவல்களுக்காக காத்திருந்த பனாமா நகர மக்கள், அதிர்ச்சியடைந்த நிலையில் வீதிகளுக்கு வெளியே கூடினர்.

தொடர் அதிர்வுகள்:

"நாங்கள் இதை மிகவும் வலுவாக உணர்ந்தோம். இது சமையலறையில் இருந்த பொருட்களைக் கீழே தள்ளியது; நாங்கள் பாதுகாப்பாக இருந்தாலும், மிகவும் பயந்துபோயுள்ளோம்," என்று நிலநடுக்கம் தாக்கிய ஹெரேரா மாகாணத்தைச் சேர்ந்த 60 வயதான ரோசெண்டோ டொமிங்குவெஸ் 'அசோசியேட்டட் பிரஸ்' செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே தொடர் அதிர்வுகள் உணரப்பட்டன. பனாமா, கொலம்பியா, ஈக்வடார், நிகராகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரை பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையை தேசிய வானிலை சேவை வெளியிட்டது.

பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முலினோ அமைதி காக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் 'எக்ஸ்' தளத்தில், "நடந்த நிகழ்வை பீதியையோ அல்லது குழப்பத்தையோ உருவாக்க பயன்படுத்தக்கூடாது," என்று பதிவிட்டார்.

சேதங்கள் குறித்து ஆய்வு:

வெராகுவாஸ், ஹெரேரா மற்றும் லாஸ் சாண்டோஸ் ஆகிய மத்திய மாகாணங்களிலேயே சேதங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளதாக தேசிய சிவில் பாதுகாப்பு சேவையை சேர்ந்த ஒமர் ஸ்மித் 'டெலிமெட்ரோ ரிபோர்டா' செய்தி சேனலில் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான வானளாவிய கட்டிடங்களை கொண்ட தலைநகரில் எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும் அவர் கூறினார்.

உள்ளூர் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட காணொளிகளில், மத்திய மாகாணமான கோக்லேவில் உள்ள பெனோனோமே நகரில் கத்தோலிக்க பேராலயம் ஒன்று இடிந்து விழுவதும், ஒரு ஹோட்டலின் முகப்பு பகுதியின் ஒரு பகுதி காரின் மீது விழுவதும் பதிவாகியிருந்தன. உடனடி உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

பசிபிக் பெருங்கடல் பகுதியை சுற்றி எரிமலைகள் மற்றும் புவித்தட்டு பிளவுகள் கொண்ட 40,000 கிலோமீட்டர் நீளமுள்ள 'ரிங் ஆஃப் ஃபயர்' எனப்படும் பகுதியில் பனாமா அமைந்துள்ளது; உலகின் பெரும்பாலான நிலநடுக்கங்கள் இப்பகுதியிலேயே நிகழ்கின்றன.

நிலநடுக்க மையம் அமைந்திருந்த பகுதிக்கு அருகிலுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக பனாமாவின் பொது பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT