உலகம்

பெருவின் தெற்கு ஆண்டிஸ் மலைப்பகுதியில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.7-ஆக பதிவு

மாகாணம் ஒன்றில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 600 பேர் உயிரிழந்தனர்.

பெருவின் தெற்கு ஆண்டிஸ் மலைப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.7 ஆக பதிவானது.

நிலநடுக்கம் ஏற்பட்டதை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) உறுதிப்படுத்தியது. இந்த நிலநடுக்கத்தால் உடனடி சேதங்கள் ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

66 கிலோமீட்டர் ஆழம்:

உள்ளூர் நேரப்படி மதியம் 1 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், அயகுச்சோ பிராந்தியத்தின் பரினகோச்சாஸ் மாகாணத்தில் உள்ள உபாஹுவாச்சோ நகரத்திற்கு வடமேற்கே 38 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்ததாக USGS கூறியது.

இந்த நிலநடுக்கம் 66.7 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இக்கா மற்றும் அரேகிபாஉள்ளிட்ட பெருவின் தெற்கு பகுதிகள் பலவற்றில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

நெருப்பு வளையத்தின் பகுதி:

அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படும் பகுதியான பசிபிக் பெருங்கடலின் "நெருப்பு வளையத்தின்" (Ring of Fire) ஒரு பகுதியாக பெரு இருப்பதால், அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி நிகழ்கின்றன.

2007-ஆம் ஆண்டில், இக்கா பிராந்தியத்தின் மாகாணம் ஒன்றில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 600 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியா நிலநடுக்கம்:

கடந்த சில தினங்களுக்கு முன்பு கிழக்கு இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், நிலநடுக்கத்திற்கு பிந்தைய அதிர்வுகள் குறித்த அச்சத்தால் பலர் இரவு முழுவதும் திறந்தவெளியில் தங்கினர்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த நாட்டின் கத்தோலிக்கர்கள் அதிகம் வசிக்கும் 'ஃப்ளோரஸ்' தீவில் உள்ள ஆறு மாவட்டங்களில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கியவர்களை தேடி மீட்புக் குழுவினர் இடிபாடுகளை அகற்றினர்.

நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மங்கராய், கிழக்கு மங்கராய் மற்றும் நாகேகியோ ஆகிய மூன்று மாவட்டங்களில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன; ஏனெனில் இப்பகுதிகளைச் சென்றடைவது கடினமாக இருந்தது.