அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தும் போர் நீடித்துக் கொண்டே சென்றால், அது தங்களுக்கு பாதகமாக இருக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-வது ஆண்டாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது அடிக்கடி சரமாரியாக டிரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.
ரஷியா கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வந்தாலும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் அதை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்கா வழங்கும் வான்பாதுகாப்பு சிஸ்டம் உக்ரைனுக்கு பெரும் உதவியாக உள்ளது.
இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த போர் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்குள் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்தையும் கடந்து நடைபெற்று வருகிறது.
இந்த போர் நீடித்துக் கொண்டிருந்தால் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் ஆயுத சப்ளை குறைந்துவிடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அச்சம் அடைந்துள்ளார். "இன்று நாம் முக்கியத்துபவம் வாய்ந்தவர்களாக இல்லை என்பது ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். ஈரான் போர் நீடித்தால் உக்ரைனுக்கான ஆதரவு குறைந்து விடும் என்று அச்சப்படுகிறேன்" என ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.