உலகம்

நெருக்கடியில் ஹார்முஸ்: ரஷிய எண்ணெய் வாங்க மேலும் 30 நாட்கள் அனுமதி வழங்கிய அமெரிக்கா!

ஏப்ரல் 11 உடன் இந்த சலுகையின் கெடு முடிந்தது. மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஈரான் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி தட்டுப்பாடு நிலவுகிறது.

இதனால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் விலை உயரும் அபாயம் ஏற்பட்டது.

இதைத் தடுக்க கடந்த மாதம் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்க கருவூல துறை 30 நாட்களுக்கு தளர்த்தியது. குறிப்பாக ரஷிய எண்ணெய் வாங்க மாட்டோம் என அமெரிக்காவுக்கு ஒப்பந்தம் போட்ட இந்தியாவிற்கு இந்த சலுகை நிம்மதியளித்தது. அதேநேரம் அரசியல் ரீதியாக சர்ச்சையும் ஆனது. கடந்த ஏப்ரல் 11 உடன் இந்த சலுகையின் கெடு முடிந்தது. மீண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படாது என அமெரிக்கா தெரிவித்திருந்தது.

ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இன்னும் கருத்து வேறுபாடு நீடிப்பதால் ரஷிய எண்ணெய் வாங்குவதற்கு மேலும் 30 நாட்கள் அவகாசம் அளித்து அமெரிக்க கருவூல துறை அறிவித்துள்ளது. இந்தச் சலுகை வரும் மே 16-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

ஆனால் புதிய கொள்முதலுக்கு அல்லாமல், தற்போது கடல் மார்க்கமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் (In-transit) கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய மட்டுமே அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. அமெரிக்க தடை நீக்கப்பட்டிருந்த முதல் 30 நாட்களில், இந்தியா தனது வழக்கமான அளவை விட 3 மடங்கு அதிக எண்ணெய்யை ரஷியாவிடம் இருந்து வாங்கியுள்ளது.