இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே பெயரளவில் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. போர் நிறுத்த காலக்கட்டத்திலும் இஸ்ரேல் தரப்பில் லெபனானை குறித்து நடத்தப்படும் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இரு நாடுகளுக்கு இடையிலான சமீபத்திய போர் நிறுத்தம் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே இன்று (வியாழக்கிழமை) வாஷிங்டனில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
தெற்கு லெபனான் மற்றும் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களின் குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு எச்சரித்த பின்னர், வியாழக்கிழமையன்று அங்குள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. இஸ்ரேலிய எல்லைக்குள் ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானம் ஒன்று விழுந்ததில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகவும் அது கூறியது.
கடுமையான தாக்குதல்களில் 22 பேர், அவர்களில் எட்டு பேர் குழந்தைகள், கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்த ஒரு நாள் கழித்து, எச்சரிக்கை விடுக்கப்படாத பகுதிகள் உட்பட தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடந்ததாக லெபனானின் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம் (NNA) செய்தி வெளியிட்டுள்ளது.
வாஷிங்டனில் நடந்த இரண்டு நாள் பேச்சுவார்த்தைகள் குறித்து அறிந்த ஒரு தூதரக அதிகாரி, அமெரிக்க வெளியுறவுத் துறையில் காலை 9:00 மணிக்கு (1300 GMT) சற்றுப் பிறகு கலந்துரையாடல்கள் தொடங்கியதாகக் கூறினார்.