உலகம்

கினியா தலைநகரில் குப்பை கிடங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 30 பேர் பலி

நிலச்சரிவில் அருகில் இருந்த குடிசைகள் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கினியாவின் தலைநகரான கோனாக்ரியில் உள்ள மிகப்பெரிய குப்பை கிடங்கில், மலைபோல் குவிந்திருந்த குப்பைகள் சரிந்து விழுந்ததில் 30 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை 2 மணி அளவில் பெய்த பலத்த மழையால் 'தார் எஸ் சலாம்' (Dar Es Salam) பகுதியில் உள்ள குப்பைகள் அடித்து செல்லப்பட்டதாகவும், அதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் அருகில் இருந்த குடிசைகள் புதையுண்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீட்பு பணிகள்:

உயிர் பிழைத்தவர்களைக் கண்டறியும் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆறு பேர் பலத்த காயமடைந்தனர்; பல வீடுகள் சேதமடைந்தன.

நகரின் மிகப்பெரிய திறந்தவெளி குப்பை கிடங்கான இந்த இடத்தை ஞாயிற்றுக்கிழமையன்று மூடுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்ததாக, ராணுவ பொறியியல் பிரிவின் சுகாதார அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பால்டே மாமடூ பைலோ தெரிவித்தார்.

வெளியேற அறிவிப்பு:

குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன; இதனால் பலர் அப்பகுதியை விட்டு வெளியேறியிருந்தாலும், விபத்து நடந்த நேரத்தில் இன்னும் பலர் அங்கேயே இருந்ததாக அதிகாரிகள் கூறினர்.

"மீதமுள்ள குடும்பங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று அப்பகுதியை நேரில் பார்வையிட்ட பிராந்திய நிர்வாகம் மற்றும் அதிகாரப் பரவலாக்கத் துறை அமைச்சர் டியெனாபூ டூரே தெரிவித்தார்.