உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் குவைத் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் - 5 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு!

ஓமன் நாட்டு அதிகாரிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி - இந்திய தூதரகம்.

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தீவிரமடைந்து வரும் மத்திய கிழக்கு போர் காரணமாக, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

தங்களது அனுமதியின்றி பயணிக்கும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரானும், ஈரானிய துறைமுகங்களை நோக்கிச் செல்லும் கப்பல்கள் மீது அமெரிக்க கடற்படையும் மாறி மாறித் தாக்குதல் நடத்தி வருவதால் இப்பகுதியில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

கச்சா எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்

இந்தச் சூழ்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் குவைத் நாட்டின் கொடியுடன் 'எம்.டி காசிமா-3' என்ற பிரம்மாண்ட கச்சா எண்ணெய் கப்பல் சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்தப் பாதையில் வந்த கப்பலை இலக்கு வைத்து திடீரென ஏவுகணை மூலம் கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஏவுகணை பாய்ந்த வேகத்தில் கப்பல் கடுமையாகச் சேதமடைந்ததுடன், அதில் பயணம் செய்த மாலுமிகளின் உயிருக்கு ஆபத்தான சூழல் உருவானது. தாக்குதலுக்கு உள்ளான அந்தக் கப்பலில் 5 இந்திய மாலுமிகள் பணியாற்றி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓமன் கடற்படையின் அதிரடி மீட்பு நடவடிக்கை

கப்பல் தாக்கப்பட்டுக் கடலில் தத்தளிப்பது குறித்த அவசரத் தகவல் கிடைத்தவுடன், ஓமன் நாட்டு கடற்படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அதிரடி மீட்புப் பணியில் இறங்கியது.

கடற்படை வீரர்களின் துரிதமான மற்றும் சாகச முயற்சியால், கப்பலில் சிக்கித் தவித்த 5 இந்திய மாலுமிகளும் எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்திய தூதரகம் நெகிழ்ச்சி கலந்த நன்றி

இந்த மீட்பு நடவடிக்கை குறித்து ஓமனில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளதாவது, தாக்குதலுக்கு உள்ளான வர்த்தகக் கப்பலில் இருந்த 5 இந்திய மாலுமிகளையும் மீட்கும் பணியை இந்திய தூதரகம் முழுமையாக ஒருங்கிணைத்தது.

தற்போது 5 இந்தியர்களும் பாதுகாப்பாகக் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்த இக்கட்டான சூழலில், மீட்புப் பணியின் போது மிக விரைவாகச் செயல்பட்டு உதவிய ஓமன் நாட்டு அதிகாரிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

இச்சம்பவம் சர்வதேச கப்பல் போக்குவரத்துத் துறையினர் மத்தியிலும், உலக நாடுகள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், மத்திய கிழக்கு பகுதியின் கடல்சார் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT