பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் ரஷிய அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் வரும் 12 மற்றும் 13-ம் தேதிகளில் நடைபெறுகிறது.
நான்காவது முறையாக இந்தியா தலைமை தாங்கி மாநாட்டை நடத்துகிறது. இது டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொதுவான முன்னுரிமைகள் மற்றும்
உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இதில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்பார் என்றும், பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
பிரிக்ஸ் மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.