உலகம்

மரண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி? கிம் ஜாங் உன்னின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய வடகொரியா!

கிம் ஜாங் உன் சுமார் 140 கிலோ எடை கொண்டுள்ளார். உடல் பருமன் காரணமாக அவருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மருத்துவ அவசரநிலை காரணமாக உயிரிழந்துவிட்டதாகச் சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அவர் நலமுடன் இருக்கும் புதிய புகைப்படங்களை வடகொரிய அரசு ஊடகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கிளப்பிய மரண வதந்தி, உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சில மணி நேரங்களிலேயே வடகொரியா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஆடை, காலணிக் கண்காட்சியில் கிம் ஜாங் உன்

42 வயதான அதிபர் கிம் ஜாங் உன், திங்கட்கிழமை அன்று குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள் மற்றும் காலணிகள் தயாரிப்பு கண்காட்சியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்குள்ள தயாரிப்புகளை அவர் கையில் எடுத்துப் பரிசோதிப்பதும், அதிகாரிகளுக்குப் பல்வேறு ஆலோசனைகளை வழங்குவது போன்ற புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எனினும், இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்ட சரியான தேதி மற்றும் அதன் உண்மைத்தன்மை குறித்து சர்வதேச ஊடகங்களால் இன்னும் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

வதந்தியைப் பரப்பிய சீன அதிருப்தியாளர்

அமெரிக்காவில் வசித்து வரும் சீன ஜனநாயகக் கட்சியின் அதிருப்தியாளரான வான்ஜூன் ஷி , ஞாயிற்றுக்கிழமை அன்று 'X' தளத்தில் தொடர்ச்சியாக வெளியிட்ட பதிவுகளே இந்த வதந்திகளுக்குக் காரணமாக அமைந்தன.

அவர் தனது பதிவில், "கிம் ஜாங் உன்னுக்கு மூளையில் கடுமையான ரத்த கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார். பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை நிபுணர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் ரகசியமாக வடகொரியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதனால் வடகொரியாவில் அரசியல் அதிகாரப் போட்டி ஏற்படாமல் தடுக்க சீனா 9,000 ராணுவ வீரர்களை பியாங்யாங்கிற்கு அனுப்பியுள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், இதற்கான எந்தவொரு மருத்துவ ஆதாரங்களையோ அல்லது சான்றுகளையோ அவர் சமர்ப்பிக்கவில்லை.

இருப்பினும், இந்த செய்தி உலக ஊடகங்களில் காட்டுத்தீயாகப் பரவியதால், கிம் ஜாங் உன்னுக்குப் பிறகு அவரது தங்கை கிம் யோ ஜாங் நாட்டின் புதிய அதிபராகப் பொறுப்பேற்பாரா என்ற ஊகங்களும் எழத் தொடங்கின.

கிம் ஜாங் உன்னின் உடல்நிலை மற்றும் பின்னணி

வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்து தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பு கடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில், கிம் ஜாங் உன் சுமார் 140 கிலோ எடை கொண்டுள்ளார்.

உடல் பருமன் காரணமாக அவருக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. ஆனால், அவருக்குப் பெரிய அளவிலான மருத்துவப் பாதிப்புகள் எதுவும் இல்லை என்றும், அண்மையில் நடந்த கடற்படை கப்பல் ஆய்வின் போது அவர் படிக்கட்டுகளில் வேகமாக ஓடி ஏறியதாகவும் உளவு அமைப்பு குறிப்பிட்டிருந்தது.

2011-ம் ஆண்டு தனது தந்தை கிம் ஜாங் இல்லின் மறைவுக்குப் பிறகு வடகொரியாவின் அதிபராகப் பொறுப்பேற்ற கிம் ஜாங் உன், அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடும் வகையில் தொடர்ந்து அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT