பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் இரு வாரங்களுக்கு முன் இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது.
நகரின் பல இடங்களில் மின்சாரக் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கியதில் சிலர் பலியாகினர். மழை தொடர்பான சம்பவங்களில் 20-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூறாவளிக் காற்றினால் மரங்கள், ராட்சத விளம்பரப் பலகைகள் வேரோடு சாய்ந்தன.
மழையினால் நூற்றுக்கணக்கான மின்மாற்றிகள் பழுதடைந்ததால், கராச்சி மாநகரின் பெரும் பகுதி இருளில் மூழ்கியது. தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியது. அதன்பின் கராச்சியில் சஜகநிலை சற்றே திரும்பியது.
இந்நிலையில், கராச்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 38.6 மீல்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதற்கு முன்னதாக, 1985-ம் ஆண்டில் கராச்சியில் 37 மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகியது என பாகிஸ்தான் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த கனமழையால் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளனர்.