கூட்டாக ஆயுத உற்பத்தி செய்யும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் உள்ளிட்ட 4 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
கத்தாரின் தலைநகரான தோஹாவில் நேற்று பாகிஸ்தான், துருக்கி, கத்தார் மற்றும் இந்தோனேசியா ஆகிய 4 நாடுகள் இடையே பத்ர் (Badr) ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
இந்த ஒப்பந்தம், கூட்டாக ஆயுத உற்பத்தி செய்வது, ராணுவத் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்வது மற்றும் பாதுகாப்பு துறையில் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.
கத்தார் பாதுகாப்பு அமைச்சகத்தின்படி, இந்த ஒப்பந்தம் நான்கு நாடுகளின் ஆயுத உற்பத்தித் திறன்களை மேம்படுத்துவதையும், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாககொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், நான்கு நாடுகளும் தங்களின் வளங்கள், தொழில்நுட்பம், தொழிலாளர்கள் மற்றும் முதலீடுகளைப் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று ஆதரவளிக்கும் என்று தெரிவித்துள்ளது.
சர்வதேச உத்திசார் ஆய்வுக் கழகத்தின் ஆராய்ச்சி உதவியாளரான ஆல்பர்ட் விடாலின் கூற்றுப்படி, பாகிஸ்தானும் இந்தோனேசியாவும் துருக்கியின் ஆயுதங்களை வாங்குவதிலும், அவற்றில் ஒரு பகுதியை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றன.
துருக்கி நவீன ஆயுதத் தொழில்நுட்பத்தையும், ராணுவ அமைப்புகளை உருவாக்கும் அனுபவத்தையும், ஒரு வலுவான பாதுகாப்புத் தொழில்துறையையும் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஆயுத உற்பத்தித் திறன்கள், தொழிலாளர் சக்தி மற்றும் பெரிய உள்நாட்டுச் சந்தைகளைக் கொண்டுள்ளன.
அதே சமயம், முதலீடு செய்வதற்கான பணமும், ஆயுதங்களைக் கொள்முதல் செய்யும் திறனும் கத்தாரிடம் உள்ளது. எனவே இந்த பலங்களை ஒன்றிணைப்பது முக்கியதுமானதாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக மெக்கா ஒப்பந்தத்தை தொடர்ந்து, முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளுடனான பாகிஸ்தானின் இந்த பத்ர் ஒப்பந்தம் அந்நாட்டிற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.