ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் டேங்கர் கப்பல்களை இயக்கி வந்தால், அக்கப்பலை இயக்கும் கேப்டன்களுக்கு இந்திய மதிப்பில் மாதம் ரூ.1 கோடி வரை சம்பளமும், ரூ.50 லட்சம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என எண்ணெய் கப்பல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது எண்ணெய் கப்பல் இயக்கும் சாதாரண கேப்டன்களின் ஊதியத்தை விட இருமடங்கு அதிகமாகும். மேலும் ஒவ்வொரு ஹார்மூஸ் பயணத்திற்கும் இந்த ஊதியம் உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன்கள் மட்டுமின்றி, சாதாரண மாலுமிகளின் சம்பளமும் 4 முதல் 6 மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகமான பைனான்சியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள தற்போதைய அறிக்கையின்படி இந்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த அசுர ஊதியத்தையும், ஊக்கத்தொகையையும் தனியார் கப்பல் நிறுவனங்கள், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் கிழக்கு நாடுகளின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் வழங்குகின்றன.
அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக ஹார்மூஸை கடக்கும் கப்பல்களை ஈரான் தாக்கி வருகிறது. குறிப்பாக கடந்த 20 நாட்களில் மட்டும் 14 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
உயிருக்கு பயந்து யாரும் ஹார்மூஸை கடக்காததால், மாலுமிகளைக் கப்பல்களிலேயே தங்கவைக்க கப்பல் உரிமையாளர்கள் இவ்வளவு பெரிய தொகையை வழங்க முன்வருகின்றனர்.
இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள கப்பல் உரிமையாளர்கள் அதிக ஊதியத்தை வழங்கினாலும், சில மாலுமிகள் இதனை செய்ய மறுக்கின்றனர். அப்படி மறுக்கும்போது அவர்களுக்கு பதில் வேறு சிலர் நியமிக்கப்படுகிறார்கள்.
சில நேரங்களில் ஆட்கள் கிடைக்காத பட்சத்தில் அந்த மாலுமிகளை மிரட்டி, அதாவது தாயகம் திரும்புவதற்கான அவர்கள் செலவுகள் அனைத்தையும் அவர்களே ஏற்க வேண்டும் எனக்கூறி பயணம் மேற்கொள்ள கப்பல் உரிமையாளர்கள் அழுத்தம் கொடுப்பதாகவும் இந்திய ஃபார்வர்ட் சீமென்ஸ் யூனியனின் பொதுச் செயலாளர் மனோஜ் யாதவ் தெரிவித்துள்ளார்.
ஃபார்வர்ட் சீமென்ஸ் அமைப்பின் தகவலின் படி ஈரான் - அமெரிக்கா இடையே போர் தொடங்கியதிலிருந்து 93 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளன. இதில் 24 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுபோன்று செல்லும் பெரும்பாலான கப்பல்கள் இரவில், அவற்றின் ஜிபிஎஸ் சமிக்ஞை அமைப்புகளை அணைத்துவிட்டு, ஹார்மூஸ் ஜலசந்தியை ஆபத்தான சூழலில் கடந்து செல்கின்றன.
ஓமான் சுல்தானகம் கடற்கரைக்கு அருகிலுள்ள ஒரு பாதையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக, அமெரிக்கக் கடற்படை தற்காப்பு வான்வழித் திறன்களைப் பயன்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ், இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஏழ்மையான சமூகங்களிலிருந்து இந்த கப்பல் பணிக்கு வருகின்றனர். இவர்களின் வறுமை சூழல் பயன்படுத்தப்பட்டு இதுபோன்ற ஆபத்தான சூழல்களில் தள்ளப்படுகின்றனர்.
மத்திய கிழக்கின் போரால் தற்போது எல்லா இடங்களிலிருந்தும் மாலுமிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் ஒப்புக்கொள்ளாவிட்டால், தங்கள் வேலையை இழக்க நேரிடுகிறது. ஒப்புக்கொண்டால் உயிரையே இழக்க நேரிடுகிறது என மனோஜ் யாதவ் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.