உலகம்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்- உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது

ஜே.டி.வான்ஸ் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதிக்கு 4-வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அலெக் நீல் வான்ஸ் என்று பெயரிட்டு இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் தனக்கு 4-வது குழந்தை பிறந்திருப்பது பற்றி ஜே.டி.வான்ஸ் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'உஷாவும், குழந்தையும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உள்ளனர். எங்களது 3 குழந்தைகளும் தங்களுடைய சிறிய சகோதரனை உற்சாகத்தோடு வரவேற்றனர்' என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், சிகிச்சையளித்த வால்டர் ரீட் மருத்துவமனை மருத்துவர்களுக்கும், வெள்ளை மாளிகை மருத்துவ குழுவுக்கும் ஜே.டி.வான்சும், அவரது மனைவியும் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக..

ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதிக்கு குழந்தை பிறந்திருப்பது, அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 150 ஆண்டுகளில் அமெரிக்க துணை அதிபராக பதவியில் இருந்தபோது யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை. தற்போது ஜே.டி.வான்ஸ் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.

ஜே.டி.வான்ஸ் - உஷா தம்பதிக்கு ஏற்கனவே எவான், விவேக் ஆகிய மகன்களும், மிரபெல் என்ற மகளும் உள்ளனர். தற்போது அலெக் இந்த குடும்பத்தின் புதிய உறுப்பினராக இணைந்து உள்ளார்.

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தை சேர்ந்தவர் உஷா. வான்ஸ் - உஷா இருவரும்யாலே சட்டப் பள்ளியில் படித்தபோது நட்பாக பழகினர். 2013-ம் ஆண்டு பட்டம் பெற்று அடுத்த ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இந்து முறைப்படியும், கத்தோலிக்க முறைப்படியும் நடந்தது.

இரண்டுமே கிடைத்தது..

குழந்தை பிறந்தது பற்றி வெள்ளை மாளிகையில் பேசிய ஜே.டி.வான்ஸ், 'துணை அதிபர் ஆவதற்கு முன்பே, நான் உஷாவிடம், அன்பே, எனக்கு உண்மையிலேயே 4-வதாக ஒரு குழந்தை வேண்டும் என்று சொன்னேன்.

அதற்கு அவர் சரி, ஆனால் நீங்கள் அமெரிக்காவின் துணை அதிபராகலாம் அல்லது நான்காவது குழந்தையை பெற்றுக் கொள்ளலாம். இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது என்று பதில் அளித்தார். நல்ல வேளை எனக்கு இந்த இரண்டுமே கிடைத்து இருக்கிறது' என்று சிரித்தபடியே கூறினார்.