செவ்வாய் நிலவுகள் ஆய்வுத் திட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், ஜப்பானின் தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து எச்3 ரிகெட் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
செவ்வாய் கிரகத்தின் துணைக்கோளான 'போபோஸ்' நிலவிலிருந்து மண் மற்றும் பாறை மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குத் கொண்டுவரும் வரலாற்று சிறப்புமிக்க விண்வெளிப் பயணத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு மையமான 'ஜாக்சா' வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. செவ்வாயின் வளிமண்டல ரகசியங்களை உற்றுநோக்கவும், அங்கு உயிரினங்கள் தோன்றுவதற்கான சூழல் எத்தகையது என்பதை ஆராயவும் இந்த முயற்சி விஞ்ஞானிகளால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
செவ்வாய் நிலவுகள் ஆய்வுத் திட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், ஜப்பானின் தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து எச்3 ரிகெட் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் தனது நீண்ட நெடிய பயணத்தைத் தாண்டி, அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாயைச் சுற்றியுள்ள போபோஸ் மற்றும் டீமோஸ் ஆகிய இரண்டு நிலவுகளில், முதன்மையாகப் போபோஸ் நிலவில் தரையிறங்கும் இந்த விண்கலம், அதன் மேற்பரப்பில் இருந்து குறைந்தது 10 கிராம் அளவிலான மண் மற்றும் பாறைத் துகள்களைச் சேகரிக்க இலக்கு நிர்ணயத்துள்ளது. இந்தத் திட்டத்திற்காக பிரான் மற்றும் ஜெர்மனி விண்வெளி முகமைகளால் கூட்டாக உருவாக்கப்பட்ட 'இடெபிக்ஸ்' என்ற சிறிய ரோவர் வாகனமும் விண்கலத்தில் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ரோவர் நிலவின் மேற்பரப்பில் இறங்கி துல்லியமான மாதிரிகளைத் தேர்ந்தெடுக்க உதவி புரியும்.
போபோஸ் மற்றும் டீமோஸ் நிலவுகள் எப்படி உருவானவை என்பதில் விஞ்ஞானிகள் மத்தியில் இரண்டு கோட்பாடுகள் நிலவுகின்றன. செவ்வாயில் மோதிய விண்கல் சிதறல்களால் இந்த நிலவுகள் உருவாயினவா அல்லது செவ்வாயின் ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்பட்ட விண்கற்களா என்ற நீண்ட நாள் விடை தெரியாத கேள்விக்கு இந்த ஆய்வு முடிவு கட்டும்.
ஜப்பான் விண்வெளி மையமான ஜாக்சாவுடன் இணைந்து, நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், பிரெஞ்சு விண்வெளி முகமை மற்றும் ஜெர்மன் விண்வெளி மையம் ஆகியவை இந்தப் பணியில் இணைந்து செயல்படுகின்றன. போபோஸ் நிலவில் மாதிரிகளைச் சேகரித்துவிட்டு, செவ்வாயின் மற்றொரு நிலவான டீமோஸையும் ஆய்வு செய்த பிறகு, இந்த விண்கலம் பூமியை நோக்கித் திரும்பும். இந்த ஆராய்ச்சிப் பொருட்கள் அடங்கிய விண்கலப் பேழை வரும் 2031ஆம் ஆண்டில் பாதுகாப்பாக ஆஸ்திரேலியாவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.