ஜப்பானில் கனமழை  
உலகம்

ஜப்பானில் வரலாறு காணாத கனமழை - 4 பேர் பலி - ஐவர் படுகாயம்

20,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனா ஆகிய ஆசிய நாடுகளை ஒரே நேரத்தில் டால்பின், சான் ஹோம், பேய்லூ ஆகிய மூன்று புயல்கள் அடுத்தடுத்துத் தாக்கியுள்ளன.

இதனால் ஜப்பானில் பெய்த வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். மேலும் ஐவர் பலத்த காயமடைந்தனர்.

கனமழை

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகில் உள்ள சிபா மாகாணத்தில் நேற்று மதியம் முதல் மணிக்கு 100 மி.மீ-க்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது.

இது அங்கு ஆகஸ்ட் மாதம் பொழியும் சராசரி மழையளவை விட 3 மடங்கு அதிகம் என்றும், ஜப்பான் வரலாற்றிலேயே பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம்

சிபா மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய காரில் சிக்கி ஒரு பெண், தெருக்களில் மயங்கி விழுந்த இருவர் உட்பட மொத்தம் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஐவர் பலத்த காயங்களுடம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முடக்கம்

1,00,000க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

20,000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவைகள் மற்றும் முக்கிய நெடுஞ்சாலைகள் முடங்கியுள்ளன.

விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் சுமார் 7,000 பயணிகள் இரவு முழுவதும் விமான நிலையத்திலேயே முடங்கினர்.

மேலும் 1,000க்கும் மேற்பட்டோர் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சம் புகுந்தனர்.

நேற்று விடுக்கப்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ள அபாயம் இன்றும் நீடிப்பதாக உள்ளூர் நிர்வானம் அறிவிய்த்துள்ளது.

இதனிடையே இன்று முதல் விமானங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும், ரத்து செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT