'ஜெய்ஷ் இ முகமது' தலைமையகம்  
உலகம்

ஆபரேஷன் சிந்தூரில் தகர்க்கப்பட்ட 'ஜெய்ஷ் இ முகமது' தலைமையகம் பாகிஸ்தான் அரசு நிதியுடன் புனரமைப்பு?

பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பிற்கு தவணை முறையில் சுமார் பாகிஸ்தான் ரூபாயில் 25 கோடி நிதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக பாகிஸ்தான் மீது மே 7 அன்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவ தாக்குதல் நடத்தியது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கவராத முகாம்கள் குறிவைத்து தாக்கப்பட்டன.

பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதல் நடத்த தொடங்கியதை தொடர்ந்து ஏற்பட்ட ராணுவ மோதல் மே 10 அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்தது.

ஆபரேஷன் சிந்தூரில் பல பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

ஜெய்ஷ் இ முகமது தலைமையகம்

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்த பாகிஸ்தானின் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் முழுமையாக சீரமைக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

ஆபரேஷன் சிந்தூரின்போது பஹவல்பூர் மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஜெய்ஷ் அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் உறவினர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியாவில் நடத்தப்பட்ட 2001 நாடாளுமன்ற தாக்குதல், 2016 பத்தான்கோட் தாக்குதல் மற்றும் 2019 புல்வாமா தாக்குதல்களுக்கு சதித்திட்டம் தீட்ட இந்த இடம் பயன்படுத்தப்பட்டது என கூறப்படுகிறது.

புனரமைப்பு

தற்போது கிடைத்துள்ள சாட்டிலைட், புகைப்படங்கள் மற்றும் பிற ஆதாரங்களின்படி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த 18 ஏக்கர் வளாகம், புதிய பளிங்கு கற்கள் பாதிக்கப்பட்டு, புதிய பிளாஸ்டரிங் மற்றும் வண்ணப் பூச்சுகள் செய்யப்பட்டுள்ளது.

தாக்குதலில் தகர்க்கப்பட்ட குவிமாடங்கள் மீண்டும் கட்டப்பட்டுள்ளன.

முதன்மை மண்டபத்தில் ஏவுகணை தாக்குதலால் விழுந்த பள்ளங்கள் சிமெண்ட் மற்றும் கான்கிரீட் கொண்டு மூடப்பட்டு, தடயமே தெரியாதவாறு முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது

முதன்மை வளாகத்தை ஒட்டிச் சேதமடைந்திருந்த ஜெய்ஷ் அமைப்பு தளபதிகளின் இருப்பிடங்கள் அகற்றப்பட்டு, அந்த இடங்களில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் அரசின் நிதியுதவி

உளவுத்துறை தகவல்களின்படி, இந்த மறுசீரமைப்பு பணிகளுக்காக பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பிற்கு தவணை முறையில் சுமார் பாகிஸ்தான் ரூபாயில் 25 கோடி நிதி வழங்கியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் மத்திய மண்டபத்தைச் சீரமைக்க மட்டுமே பாகிஸ்தான் ரூபாயில் சுமார் 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது