உலகம்

அதிபர் டிரம்ப் பேச்சுக்கு கடும் கண்டனம்: வீடியோ வெளியிட்ட இத்தாலி பிரதமர் மெலோனி

அமெரிக்க பயணத்தை இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ தஜானி ரத்து செய்துள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, தன்னுடன் புகைப்படம் எடுக்க கெஞ்சியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதற்கு இத்தாலி அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பிரான்ஸ் நாட்டில் நடந்து முடிந்த ஜி7 மாநாட்டில் இத்தாலி பிரதமர் மெலோனி தன்னுடன் புகைப்படம் எடுக்க வேண்டி கெஞ்சியதாக கூறினார்.

இத்தாலி பிரதமர் குறித்த டிரம்ப்பின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், டிரம்ப்பின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த தனது அமெரிக்க பயணத்தை இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அண்டோனியோ தஜானி ரத்து செய்துள்ளார்.

இந்த நிலையில், அதிபர் டிரம்ப்பின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக இத்தாலி பிரதமர் மெலோனி காட்டமாக பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்சமாட்டோம் என கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள விடியோவில், “டொனால்டு டிரம்ப்பின் பேச்சுக்கள் முற்றிலும் புனையப்பட்டவை. நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்துள்ளேன். அமெரிக்காவின் அதிபர் தனது நட்பு நாடுகளுடன் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என எனக்குத் தெரியவில்லை. மேலும், இது முதல்முறை நடக்கும் விஷயமும் அல்ல.

மேற்குலக நாடுகள் மற்றும் அமெரிக்காவின் எதிரிகளுக்கு எதிராக அவர் இதுபோன்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அதற்கு மாறாக, சில தலைவர்களுடன் அவர் இணக்கமான நடைமுறையையே கடைப்பிடிக்கிறார்.

ஆனால், ஒன்றை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்: இத்தாலியும் நானும் எதற்கும் கெஞ்சமாட்டோம்" எனக் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT