உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனமான ஆக்சென்ச்சர் நிறுவனம் தனது 2026 நிதியாண்டுக்கான வருவாய் வளர்ச்சி வழிகாட்டுதலின் உச்ச வரம்பைக் குறைத்தது. இதனைத் தொடர்ந்து, முக்கிய வெளிநாட்டுச் சந்தைகளில் தேவை குறித்த புதிய கவலைகள் எழுந்துள்ளது.
காலை 10:03 மணி நிலவரப்படி, நிஃப்டி ஐடி குறியீடு 5.19% சரிந்து, இன்றைய தினத்தில் மிக மோசமான துறைசார் குறியீடாக மாறியுள்ளது. இதனால், இன்ஃபோசிஸ், டிசிஎஸ், எச்.சி.எல்.டெக் மற்றும் பிற தகவல் தொழில்நுட்பப் பங்குகள் இன்று அழுத்தத்தில் உள்ளன.
இந்நிலையில் இன்ஃபோசிஸ் 7.59% சரிந்து ரூ. 1,041.9 ஆகவும், டிசிஎஸ் 5.46% சரிந்து ரூ. 2,082.9 ஆகவும் உள்ளது. எச்.சி.எல்.டெக் 4.31% சரிந்து ரூ. 1,111.7 ஆகவும், டெக் மஹிந்திரா 4.41% சரிந்து ரூ. 1,383.9 ஆகவும், விப்ரோ 3.38% சரிந்து ரூ. 176.66 ஆகவும் உள்ளது.
மேலும் இந்த விற்பனை அழுத்தம் பெரிய நிறுவனப் பங்குகளையும் பாதித்துள்ளது. இதில் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் 3.86%, கோஃபோர்ஜ் 2.78%, எல்டிஐமைண்ட்ட்ரீ 4.43% மற்றும் எம்பாசிஸ் 5.14% சரிந்தன.
இந்தத் தீவிர சரிவு பல முன்னணி தகவல் தொழில்நுட்பப் பங்குகளையும் பல வருடங்களில் இல்லாத குறைந்த நிலைக்குத் தள்ளியுள்ளது.
இந்த தகவல் தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்ட சரிவு, பரந்த சந்தையைக் கீழிறக்கியதுடன், காலை நேர வர்த்தகத்தின்போது முக்கியக் குறியீடுகளும் சரிவைச் சந்தித்துள்ளன.