உலகம்

லெபனான்மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஈரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு!

இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைப்பால் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தமும் முறியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்சர்லாந்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நாளை நடக்கவிருந்த உயர்மட்ட பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பர்கன்ஸ்டாக்கில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை நடைபெறாது என சுவிஸ் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதால், நேற்று முன்தினம் ஈரானும், அமெரிக்காவும் கையெழுத்திட்ட அமைதி ஒப்பந்தம் முறியக்கூடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

லெபனான்மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால் தனது தரப்பு பேச்சுவார்த்தையாளர்களை ஈரான் அனுப்பவில்லை என கூறப்படுகிறது.

அமெரிக்காவும் ஈரானும் கையெழுத்திட்ட 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போர் நிறுத்தப்பட வேண்டும். ஆனால், இதனை மீறி தெற்கு லெபனான் பகுதியில் நேற்றிரவு மற்றும் இன்று அதிகாலை இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

லெபனான் மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் நாட்டு தூதுக்குழுவை அனுப்ப ஈரான் மறுத்துள்ளது. இதனால் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவிருந்த அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸும் சுவிட்சர்லாந்துக்கான தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.