கடந்த ஜனவரி 29, 2024 அன்று காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிச் செல்லும்போது 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவளது குடும்பத்தினர் பயணித்த கார் தாக்கப்பட்டது.
இஸ்ரேல் ராணுவத்தின் 401ஆவது ஆர்மர் பிரிகேட் கீழ் இயங்கும் 52ஆவது பட்டாலியன் படைப்பிரிவின் பீரங்கியில் இருந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிறுமி ஹிந்த் ரஜப்பை தவிர காரில் இருந்த அனைவரும் கொல்லப்பட்டனர்.
அந்த காரை நோக்கி மொத்தம் 335 தோட்டாக்கள் சுடப்பட்டதும், உள்ளே குழந்தைகள் உட்பட அப்பாவி மக்களே இருப்பது தெரிந்தே தாக்குதல் நடத்தப்பட்டதும் பின்னர் விசாரணையில் தெரியவந்தது.
காயங்களுடன் காருக்குள் இருந்தபடியே ஹிந்த், மீட்பு அமைப்பான ரெட் கிரசண்ட் சொசைட்டிக்கு ஹிந்த் போன் செய்து உதவி கேட்டாள்.
ஆனால் இறுதியில் ஹிந்த் மற்றும் அவளை மீட்க வந்த 2 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் இருவரும் மீண்டும் இஸ்ரேல் படையினர் நடததிய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர்.
ஹிந்த், கடைசியாக காரில் இருந்தபடி பயத்துடன் தனது மழலைக்குரலில் மீட்பு அமைப்பினரிடம் போனில் பேசிய ஆடியோ பின்னர் வெளியாகி உலகையே உலுக்கியது. வாய்ஸ் ஆப் ஹிந்த் ரஜப் என்ற பெயரில் திரைப்படமும் வெளியாகி சர்வதேச அங்கீகாரம் பெற்றது.
இந்நிலையில் ஹிந்த் ரஜப் மற்றும் அவளின் குடும்பத்தினர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் 401ஆவது ஆர்மர் பிரிகேட் கீழ் இயங்கும் 52ஆவது பட்டாலியனின் கமாண்டரான லெப்டினன்ட் கர்னல் டோர் கெதாலியா பென் சிம்ஹோன் ஹிஸ்புல்லா போராளிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
தெற்கு லெபனானில் அவர் பயணித்துக் கொண்டிருந்த பீரங்கியை குறிவைத்து ஹிஸ்புல்லா போராளிகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கமாண்டர் பென் சிம்ஹோனுடன் சேர்த்து பீரங்கிக்குள் இருந்த மேலும் 3 இஸ்ரேலிய வீரர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கொலை நடந்த போது நேரடியாகக் களத்தில் இருந்த முக்கிய இஸ்ரேலிய அதிகாரிகள் இன்னும் எவ்வித சட்ட நடவடிக்கைகளுமின்றி இஸ்ரேலில் சுதந்திரமாக உலா வரும் நிலையில் கமாண்டர் பென் சிம்ஹோன் கொல்லப்பட்டுள்ளார்.