லெபனான் - இஸ்ரேல் இடையே அமெரிக்கா அண்மையில் போர் நிறுத்தம் கொண்டுவந்தது. ஆனால் லெபனானின் தெற்கு பகுதி மீது இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இன்று தெற்கு லெபனானில் இஸ்ரேல் அடுத்தடுத்து வான்வழித் தாக்குதல்நடத்தியுள்ளது.
நபதிஹ் மற்றும் மர்ஜாயூன் ஆகிய நகரங்களை இணைக்கும் சாலையில் சென்று கொண்டிருந்த லெபனான் ராணுவ வாகனம் ஒன்றைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் லெபனான் ராணுவத்தின் பிரிகேடியர் ஜெனரல் மற்றும் அவருடன் பயணித்த இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாக்கப்பட்ட ராணுவ வாகனம், போர் மண்டலத்துக்குள் இஸ்ரேல் படைகளை நோக்கிச் சந்தேகத்திற்குரிய வகையில் நகர்ந்து வந்தது. மேலும், அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு சத்தமும் பதிவாகியிருந்தது. எனவே அதன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை விளக்கம் அளித்துள்ளது.
தங்களது படைகள் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராகத்தான் செயல்படுகிறதே தவிர, லெபனான் ராணுவத்திற்கு எதிராக அல்ல என்று இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
இதுதவிர, சக்சாகியா என்ற கிராமத்தின் மீது இஸ்ரேல் நடத்திய மற்றொரு வான்வழித் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் நால்வர் காயங்களுக்குள்ளாகினர்.