தெற்கு லெபனானை சேர்ந்த குடும்பங்கள், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்பித்து பெய்ரூட்டின் வீதிகளில் வசிக்கும் காட்சி  
உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 3000-ஐ கடந்த உயிரிழப்பு எண்ணிக்கை - வீடுகளை இழந்த 10 லட்சம் மக்கள்

9,273 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் 292 பெண்களும் 211 குழந்தைகளும் அடங்குவர்.

ஈரான் போருக்கு இடையே அண்டை நாடான லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அங்கு இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் 2 முதல் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் பலியானோரின் எண்ணிக்கை 3,000 த்தை கடந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்று அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, இஸ்ரேலிய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் இதுவரை 3,020 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 9,273 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் 292 பெண்களும் 211 குழந்தைகளும் அடங்குவர்.

அண்மையில் அமெரிக்கா முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இருப்பினும் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

லெபனானில் ஏற்பட்டுள்ள இந்த மோதலால் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை இழந்து, தலைநகர் பெய்ரூட் கடற்கரையோரங்களிலும் சாலைகளிலும் கூடாரங்கள் அமைத்து தஞ்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹிஸ்புல்லா பதில் தாக்குதலில் இதுவரை 20 இஸ்ரேலிய வீரர்கள், 2 இஸ்ரேல்யர்கள் மற்றும் ஐநா அமைதிப்படையை சேர்ந்த 6 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் வாஷிங்டனில் இஸ்ரேல் மற்றும் லெபனான் அரசுக்கு இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

கடந்த ஏப்ரல் 17 அன்று அமலுக்கு வந்த தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை, ஜூன் மாதம் வரை மேலும் 45 நாட்களுக்கு நீட்டிக்க இரு தரப்பும் கடந்த வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டுள்ளன.

வரும் மே 29 அன்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகனில் இரு நாட்டு ராணுவ உயர்மட்ட குழுவினர் நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதில் இஸ்ரேலிய ராணுவம் லெபனானில் இருந்து வெளியேறுவது மற்றும் ஹிஸ்புல்லாக்கள் ஆயுதங்களை கைவிடுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும்.