தெற்கு லெபனானில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த அலி அல்-தாஹெர் மலைத்தொடருக்கு கீழே, ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழுவால் கட்டப்பட்ட முக்கிய சுரங்கங்களை இடித்துத் தள்ளியதாக இஸ்ரேல் தெரிவித்தது.
"இது ஈரானின் நிதியுதவி மற்றும் திட்டமிடலுடன் இரண்டு தசாப்தங்களாக கட்டப்பட்ட ஒரு பயங்கரவாத உள்கட்டமைப்பு ஆகும். இதை அழிப்பது "அலி அல்-தாஹிர் முகட்டின் மீது - தரைக்கு மேலேயும் கீழேயும் - செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை முழுமையாக்குகிறது," என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
லெபனானின் அரசுக்குச் சொந்தமான தேசிய செய்தி நிறுவனம், நபாத்தியே பிராந்தியத்தில் உள்ள அலி அல்-தாஹெர் முகட்டில் இஸ்ரேல் ஒரு "மாபெரும் வெடிப்பை" நடத்தியதாகவும், அது "நிலநடுக்கங்களையும் சக்திவாய்ந்த அதிர்வையும் ஏற்படுத்தியதாகவும்" செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள ஏ.எஃப்.பி. பத்திரிகையாளர்களும் வியாழக்கிழமை மாலை பெரும் வெடி சத்தங்களை கேட்டதாக தெரிவித்தனர். இரண்டு கிலோமீட்டருக்கும் (1.2 மைல்கள்) அதிகமான நீளத்திற்கு விரிந்திருந்த அந்தக் கட்டமைப்பில், "ஈரானில் தயாரிக்கப்பட்ட டஜன் கணக்கான ராக்கெட்டுகள், ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள், அத்துடன் இயந்திர துப்பாக்கிகள், டஜன் கணக்கான டாங்கெதிர்ப்பு ஏவுகணைகள், மற்றும் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகள் மற்றும் வெடிபொருட்கள்" இருந்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது.
அந்த நிலத்தடி வளாகத்தில் ஹிஸ்புல்லாவின் 'பத்ர்' பிரிவின் கட்டளை மையமும் அடங்கியிருந்தது என்று ராணுவம் மேலும் தெரிவித்தது.
மலைத்தொடர் பகுதியில் செயல்பட்டு வந்த சில தீவிரவாதிகள் அவ்விடத்தைக் கைவிட்டுவிட்டதாகவும், மற்றவர்கள் "வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்கள் மூலம் கொல்லப்பட்டனர்" என்றும் ஓர் இராணுவ அதிகாரி AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
அலி அல்-தாஹெர் முகட்டைக் கைப்பற்றிவிட்டதாக இஸ்ரேல் கடந்த வாரம் அறிவித்திருந்தது.
மார்ச் மாதத்தில், ஹிஸ்புல்லா ஈரானுக்கு ஆதரவான ஒரு பிராந்திய போரில் லெபனானை இழுத்தது. ஆனால், ஜூன் மாதத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட புரிந்துணர்வு மற்றும் லெபனான்-இஸ்ரேல் இடையேயான ஒப்பந்தம் ஆகியவற்றிற்கு பிறகு வன்முறையின் தீவிரம் குறைந்துள்ளது.
பேச்சுவார்த்தைகளின் போது, அவற்றிற்கு ஆதரவளித்த அமெரிக்கா, லெபனான் ராணுவம் அலி அல்-தாஹெர் முகட்டைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என்று முன்மொழிந்தது, ஆனால் ஹிஸ்புல்லா அதை மறுத்துவிட்டது என இரு தரப்பினருக்கும் நெருக்கமான ஓர் வட்டாரம் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.
மார்ச் மாதம் முதல் இஸ்ரேலிய தாக்குதல்களில் மொத்தம் 4,300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக பெய்ரூட் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், இஸ்ரேலிய படைகள் தெற்கில் "பாதுகாப்பு மண்டலம்" என்று அழைக்கப்படும் ஒரு பகுதியைத் தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளன.