பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பாலஸ்தீனர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சர்ச்சைக்குரிய, ஒருதலைபட்சமான மசோதாவை இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட் நிறைவேற்றியுள்ளது.
இதன்படி, இஸ்ரேலியர்களை கொல்லும் நோக்கில் தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்குமாறு ராணுவ நீதிமன்றங்களுக்கு இந்த மசோதா உத்தரவிடுகிறது.
ஆனால், பாலஸ்தீனியர்களை கொல்லும், கொன்றதாகக் குற்றம் சாட்டப்படும் இஸ்ரேலிய யூதர்களுக்கு இந்த தண்டனை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலின் இனப்படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இஸ்ரேலிய குடிமக்கள் அல்லாத மேற்கு கரை பாலஸ்தீனியர்களை மட்டுமே விசாரிக்கும் ராணுவ நீதிமன்றங்களுக்கு இந்தத் தண்டனையை வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு கரை பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களை மட்டும் இந்த மசோதா இலக்கு வைக்கிறது. இன்னும் 30 நாட்களில் நடைமுறைக்கு வரவுள்ள இந்தச் சட்டம், நேற்று 120 இடங்களைக் கொண்ட நெசெட்டில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட 62 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கீகரிக்கப்பட்டது.
இதற்கு எதிராக 48 பேர் வாக்களித்தனர், ஒருவர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது இஸ்ரேலின் தீவிர வலதுசாரி பிரிவினருக்குக் கிடைத்த ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் யூத சக்தி கட்சியின் தலைவர், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-கிவிர் மேற்கொண்ட, கூட்டணி ஒப்பந்தத்தின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இந்தச் சட்டத்தை 'ஒரு போர்க்குற்றம்' என்று அழைத்த பாலஸ்தீன நிர்வாகம், இது நான்காவது ஜெனீவா உடன்படிக்கையை மீறுவதாகக் கூறியுள்ளது. குறிப்பாக, தனிநபர்களுக்கு அந்த உடன்படிக்கை வழங்கும் பாதுகாப்புகளையும், நியாயமான விசாரணைக்கான உத்தரவாதங்களையும் இது மீறுகிறது என்று தெரிவித்தது.
விமர்சகர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், இந்தச் சட்டம் யூத இஸ்ரேலியர்களை விலக்கி வைத்து, பாலஸ்தீனர்களை மட்டும் குறிவைப்பதால் இது "பாகுபாடானது" மற்றும் "சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது" என்று குற்றம் சாட்டுகின்றனர்.