லெபனான் தலைநகர் பெயிரூட்டின் தெற்கு புறநகர் பகுதியான தாஹியே மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடியாகஅந்நாட்டில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பு, இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை பொழிந்தது.
இதனிடையே, லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை கண்டித்து வந்த ஈரான் தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் உடன் கடந்த ஏப்ரல் 8 அமலுக்கு வந்த தற்காலிக போர் நிறுத்ததுக்கு பிறகு முதல் முறையாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
நேற்று இரவு பெய்ரூட் மீதான தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு பின் வடக்கு இஸ்ரேலின் மீது ஈரான் ஏவுகணைகளை பொழிந்தது.
அவற்றை தங்கள் வான்பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் சமயத்தில் அங்கு பல பகுதிகளில் அவசரகால சைரன்கள் ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை.
லெபனான் - இஸ்ரேல் இடையே அமெரிக்கா ஏற்படுத்திய போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல், லெபனான் மீது நடத்தி வரும் தாக்குதலை தொடக்கத்தில் இருந்து ஈரான் கண்டித்து வருகிறது.
இந்த அத்துமீறலை இஸ்ரேல் தொடர்ந்தால், அமெரிக்காவுடன் தாங்கள் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நிறுத்துவதாக ஈரான் முன்னர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.