கான் யூனிஸில் கடந்த வெள்ளிக்கிழமை, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் இறுதிச் சடங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்  
உலகம்

காசாவில் ஓயாத ஓலம்.. போர் நிறுத்தத்தை மீறி தாக்குதலை தொடரும் இஸ்ரேல் - 16 பேர் பலி

40 வயதான பாலஸ்தீனியப் பெண் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன.

பாலஸ்தீன நாட்டின் முக்கிய நகரமான காசாவில் 3 வருட தொடர் இஸ்ரேல் தாக்குதலில் 72,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதில் பாதி பேர் பெண்கள், குழந்தைகள் என ஐநா உள்ளிட்ட அமைப்புகளின் தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபரில் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இஸ்ரேல் தொடர்நது காசாவில் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த சில மணிநேரங்களில் காசா பகுதி முழுவதும் நடந்த பல்வேறு இஸ்ரேலியத் தாக்குதல்களில், ஒரு பெண் உட்பட நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை சுகாதார அதிகாரிகளும் மருத்துவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அல்-முக்ராக் கிராமத்திற்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். காசா நகருக்கு அருகே நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கித் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியில், 40 வயதான பாலஸ்தீனியப் பெண் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றன.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை, காசா முழுவதும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் 12 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

கான் யூனிஸ் நகரில் ஒரு வாகனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அவ்வழியே சென்றுகொண்டிருந்த மூன்று பொதுமக்கள் உட்பட குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். காசா நகரில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்தனர்.

வடக்கு காசாவிலுள்ள பெய்ட் லஹியா பகுதியில் ஒரு வீட்டின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் மேலும் இருவர் கொல்லப்பட்டனர்.