உலகம்

நைஜீரியாவில் அமெரிக்கா தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பு முக்கிய தளபதி பலி

அபு-பிலால் அல்-மினுகி ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஐஎ.ஸ். பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு மூத்த தலைவர் ஆவார்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க ராணுவம், நைஜீரிய அரசு படைகளுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதலில் ஐ.எஸ். அமைப்பின் முக்கிய தளபதியான அபு-பிலால் அல்-மினூகி பலியாகி உள்ளார்.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

எனது வழிகாட்டுதலின்படி துணிச்சலான அமெரிக்கப் படைகளும் நைஜீரியாவின் ஆயுதப்படைகளும் உலகில் மிகவும் தீவிரமான பயங்கரவாதியை போர்க்களத்திலிருந்து ஒழிக்கும் பணியை நிறைவேற்றி உள்ளனர்.

உலகளவில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் 2-வது தளபதியான அபு-பிலால் அல்-மினூகி ஆப்பிரிக்காவில் ஒளிந்துகொள்ளலாம் என்று நினைத்தார். ஆனால் அவர் பற்றிய தகவல்களை உளவாளிகள் எங்களிடம் தெரிவித்து கொண்டிருந்தனர் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

அவர் இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ அல்லது அமெரிக்கர்களைக் குறிவைக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிட உதவவோ மாட்டார். அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டதன் மூலம் ஐ.எஸ். ஐ.எஸ் அமைப்பின் உலகளா விய செயல்பாடு பெருமளவில் குறைந்துள்ளது. இந்த நடவடிக்கையில் பங்களிப்பை அளித்த நைஜீரியா அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.

அபு-பிலால் அல்-மினுகி ஆப்பிரிக்காவின் சஹேல் பிராந்தியத்தில் ஐ.எஸ்.ஐஎ.ஸ். பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஒரு மூத்த தலைவர் ஆவார். மேலும் அந்த அமைப்பின் சர்வதேச கட்டமைப்பில் முக்கிய நபராக இருந்து வந்தார்.