ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் நாளை (ஏப்ரல் 1) முதல் ஆப்பிள், கூகுள், மெட்டா, ஐ.பி.எம்., டெஸ்லா மற்றும் போயிங் போன்ற 18 முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்கி அழிப்போம் என்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து இன்று (செவ்வாய் கிழமை) வெளியிட்ட அறிக்கையில், ஈரானிய அதிகாரிகளின் "குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலைகளில்" இந்நிறுவனங்கள் உடந்தையாக இருந்ததாக பாதுகாப்புப் படையினர் குற்றம்சாட்டினர்.
"இந்நிறுவனங்கள், ஏப்ரல் 1-ஆம் தேதி (புதன்கிழமை) அன்று தெஹ்ரான் நேரப்படி இரவு 8:00 மணி (1630 GMT) முதல், ஈரானில் நடைபெறும் ஒவ்வொரு படுகொலைக்கும் பதிலடியாக தங்களின் தொடர்புடைய பிரிவுகள் அழிக்கப்படுவதை எதிர்பார்க்க வேண்டும்," என்று அந்த அறிக்கை குறிப்பிட்டிருந்தது.
இந்நிறுவனங்களின் ஊழியர்களுக்கு விடுத்த ஓர் எச்சரிக்கையில், "உங்கள் உயிரைக் காத்துக்கொள்ளும் பொருட்டு, இந்நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாகத் தங்கள் பணிவிடங்களை விட்டு வெளியேறுமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்," என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
தாக்குதல் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள் பின்வருமாறு: ஆப்பிள், மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட், இன்டெல், ஐ.பி.எம்., டெல், டெஸ்லா, என்விடியா, போயிங், ஹெச்.பி., சிஸ்கோ, ஆரக்கிள், பிளான்டர், ஜே.பி. மோர்கன், ஜி.இ., ஸ்பையர் சொல்யூஷன்ஸ மற்றும் ஜி42.
அந்த அறிக்கையில் இந்நிறுவனங்களை "பயங்கரவாத நிறுவனங்கள்" என்று முத்திரை குத்தியுள்ள பாதுகாப்பு படையினர், இந்த நிறுவனங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், "ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள்" உள்ள பகுதிகளை விட்டு உடனடியாக வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிவரும் அதேவேளையில், இஸ்லாமிய குடியரசுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய பிரச்சாரத்தை தீவிரப்படுத்துவதாகவும் அவர் அச்சுறுத்தியுள்ள நிலையில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.