PAKISTAN 
உலகம்

Iran War | மத்தியஸ்தம் செய்யும் பாகிஸ்தான்... அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்கா - ஈரான் இடையே நிரந்தர தீர்வை எட்டும் பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஈஷாக் தார் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்களையும் குறிவைத்து ஈரான் பயங்கரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

அத்துடன் மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கத்தார் போன்ற நாடுகள் உற்பத்தியை நிறுத்திவிட்டன. இது உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு மேலாக உலகின் முக்கியமான கடல்வழி போக்குவரத்துக்கான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. அதன் வழியாக செல்லும் எதிரிகளின் கப்பல்களை வீழ்த்துவோம் என்று ஈரான் சூளுரைத்துள்ளது. இதனாலும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என்று ஈரானுக்கு அமெரிக்கா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கையை ஈரான் மதிக்கவில்லை.

இதையடுத்து மத்திய கிழக்கு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே நிரந்தர தீர்வை எட்டும் பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஈஷாக் தார் தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியா, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு அவர் இந்த அறிவிப்பை ஈஷாக் தார் வெளியிட்டார். இந்த சந்திப்பில், வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் நிலையை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது..

இதையடுத்து பேசிய ஈஷாக் தார், "அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் பாகிஸ்தான் பெருமையாக கருதுகிறது" என்று தெரிவித்தார்.

இந்த பேச்சுவார்த்தைகள் வரும் நாட்களில் இஸ்லாமாபாத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இதில் அமெரிக்கா மற்றும் ஈரான் நேரடியாக பங்கேற்பார்களா என்பது இன்னும் உறுதியாகவில்லை. மேலும், இந்த முயற்சிக்கு சீனா உள்ளிட்ட சில நாடுகளின் ஆதரவும் கிடைத்துள்ளது.