ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலர் தன்னை அந்நாட்டின் உச்சத் தலைவராக்க விரும்பியதாகவும், ஆனால் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த குடியரசுக் கட்சியின் நிதி திரட்டும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டிரம்ப்,
“கடந்த 47 ஆண்டுகளாக எந்த அமெரிக்க அதிபரும் செய்ய துணியாததை நாங்கள் செய்து முடித்து உள்ளோம். ஈரானின் அணு ஆயுத மிரட்டல் புற்று நோயாகும். ஆபத்தான புற்றுநோய் அகற்றப்பட வேண்டும்.
அதனால் தான் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தற்போது தொடங்கி உள்ள இந்தப் பணியை முழுமையாக முடித்து ஈரானின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.
அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உடன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள ஈரான் விரும்புகிறது. ஆனால் அதை சொல்ல அவர்கள் பயப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த மக்களால் கொல்லப்படுவார்கள் என்று நினைக்கிறார்கள்.
மேலும் அவர்கள் எங்களால் கொல்லப்படுவார்கள் என்றும் பயப்படுகிறார்கள். அவர்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தவும் விரும்புகிறார்கள்.
கமெனியின் மறைவுக்கு பிறகு இஸ்லாமிய குடியரசான ஈரானின் அடுத்த உச்ச தலைவராக நான் வர வேண்டும் என்ற யோசனையை ஈரான் தலைமை முன்வைத்தது. ஆனால் நான் அதை நிராகரித்து விட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானின் உச்சத் தலைவரான அயதுல்லா அலி கமெனியின் மறைவுக்கு பிறகு அவரது மகன் மொஜ்தபா கமெனி அந்நாட்டின் புதிய உச்சத் தலைவராக உள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் இந்தக் கூற்று வந்துள்ளது. ஈரான் உறுதிப்படுத்தினால்தான் இக்கூற்றின் உண்மைத்தன்மை வெளிவரும்.
இதற்கு முன்னரும் ஈரான் தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக ட்ரம்ப் கூறியதற்கு தெஹ்ரான் அரசு மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.