எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவையே, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருந்தது என்பது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவுடனான போரின் ஆரம்ப கட்டங்களில், ராணுவ நகர்வுகளை ஒருங்கிணைக்கவும், டிரோன் தாக்குதல்களைகட்டுப்படுத்தவும் ஈரான் ஸ்டார்லிங்கை பயன்படுத்தியது என்று முன்னணி அமெரிக்க ஊடகமான 'தி வாஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியின்படி,
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது கூட்டுத் தாக்குதலைதொடுத்த பிறகு, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் கடுமையாகப் பதிலடி கொடுத்தது.
இந்த ராணுவ நடவடிக்கைகளின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கட்டுப்படுத்தவும், தாக்குதல் டிரோன்களை கட்டுப்படுத்தவும் ஈரான் ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்தியது.
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட மிகவும் ரகசியமான போர் ஆய்வு அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது என உயர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மார்ச் 1 அன்று குவைத்தின் போர்ட் ஷுவைபாவில் உள்ள ராணுவத் தளம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இருப்பினும், இந்தக் குறிப்பிட்ட தாக்குதலில் ஸ்டார்லிங்க் பயன்படுத்தப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இந்த விசாரணை குறித்து பென்டகன் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
இதற்கிடையில், பாதுகாப்புச் செயலாளர் அலுவலகத்திற்கு இது போன்ற எந்த அறிக்கையும் தெரியாது என்றும், ஈரான் ஸ்டார்லிங்கைப் பயன்படுத்தியதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்றும் பென்டகன் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி வில்சன் கூறினார்.
ஈரான் ஸ்டார்லிங்கைத் தவறாகப் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அமெரிக்க ராணுவத்தின் நடவடிக்கைகளும் எலான் மஸ்க்கை கோபப்படுத்தியுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
நிறுவனத்தின் இரண்டு மூத்த அதிகாரிகளை மஸ்க் பணிநீக்கம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, இடைத்தரகர்கள் மூலம் ஸ்டார்லிங்க் உபகரணங்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் மீதான தனது சோதனைகளை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கடுமையாக்கியுள்ளது.
இந்த உபகரணங்கள் தவறான நபர்களின் கைகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்காக, அந்நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இருப்பினும், ஈரானில் ஸ்டார்லிங்க் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டால், அது ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும்.