உலகம்

ஈரான்-அமெரிக்கா போர் பதற்றம்: ஹார்முஸ் நீரிணை ஒப்பந்தம் எட்டப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு; ஈரான் மறுப்பு!

டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உடனடியாக மறுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஈரான் உடனான போர் பதற்றம் தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், உலக வர்த்தகத்திற்குப் மிக முக்கியமான கடல்வழியான 'ஹார்முஸ் நீரிணையை' மீண்டும் திறப்பது தொடர்பாக அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் மீது தீவிர ராணுவத் தாக்குதல்களை நடத்த அமெரிக்கப் படைகள் தயார் நிலையில் இருந்தபோதிலும், பிராந்திய நட்பு நாடுகளின் வேண்டுகோள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அந்தத் தாக்குதல்கள் ரத்து செய்யப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அதிகாரப்பூர்வ மறுப்பு:

டிரம்பின் இந்த அறிவிப்பை ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் உடனடியாக மறுத்துள்ளார். அமெரிக்காவுடன் எந்தவொரு நேரடிப் பேச்சுவார்த்தையிலும் ஈரான் ஈடுபடவில்லை என்றும், அண்டை நாடான 'ஓமன்' நாட்டின் வழிகாட்டலில் ஹார்முஸ் நீரிணையில் தற்காலிகப் பாதுகாப்பான கடல்வழிப் பாதையை அமைப்பது குறித்து மட்டுமே ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் கடற்படை முற்றுகை நீங்கும் வரை இந்த நிலைமையில் மாற்றம் இருக்காது என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.

உலகப் பொருளாதாரம்:

அமெரிக்க அதிபரின் பேச்சுவார்த்தை குறித்த தகவல்களைத் தொடர்ந்து சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை பேரல் ஒன்றுக்கு '$82.18' ஆகக் குறைந்துள்ளது. இது ஒரே நாளில் 5% க்கும் அதிகமான சரிவாகும். பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு விலையில் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.

அமெரிக்க கடற்படை முற்றுகை:

அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) கீழ் 'USS Abraham Lincoln' மற்றும் 'USS George HW Bush' ஆகிய இரு பெரும் அணுசக்தி விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

செங்கடல் பகுதியில் புதிய பிரச்சனை:

ஹார்முஸ் நீரிணை பிரச்சனை ஒருபுறமிருக்க, ஏமனின் ஹூதி அமைப்பினர் செங்கடல் பகுதியில் உள்ள 'பாப் அல்-மந்தேப்' நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ளதால், சர்வதேச கடல்வழி வர்த்தகம் மேலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.