உலகம்

Iran War | நிரந்தர போர் நிறுத்தம்: பாகிஸ்தானில் அமெரிக்கா- ஈரான் இன்று பேச்சுவார்த்தை

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு பங்கேற்கிறது.

இஸ்லாமாபாத்:

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. 6 வாரங்களாக நீடித்த இப்போரில் பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக 2 வார போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல்-ஈரான் சம்மதித்தன.

இதையடுத்து முடக்கப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதாக ஈரான் தெரிவித்தது. மேலும் நிரந்தர போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது. தற்காலிக போர் நிறுத்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று கூறி அந்நாடு மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்தது. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியது.

மேலும் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தாதவரை பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம் என்று ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே லெபனான் மீதான தாக்குதலை நிறுத்தும்படி இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தியது. இதையடுத்து இஸ்ரேல் தனது தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே பேச்சுவார்த்தைக்கு முன்பாக லெபனானில் போர்நிறுத்தம் மற்றும் ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவித்தல் ஆகிய ஈரான் விதித்த 2 முக்கிய முன் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்று கொண்டதாக தென்னாப்பிரிக்காவில் உள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலி​பாப் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்தனர்.

இக்குழவில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி, மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹெம்மாட்டி உச்ச தேசியப் பாதுகாப்புக் குழுவின் செய லாளர் அலி அக்பர் அஹ்மதியான் வெளியுறவுத் துறை துணை மந்திரி கேசெம் கரிபாபாடி வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் மற்றும் எம்.பிக்கள் உள்பட 71 பேர் சென்று உள்ளனர்.

ஈரான் குழுவினரை பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை மந்திரியுமான இஷாக் தார், பாராளுமன்ற சபாநாயகர் அயாஸ் சாதிக், ராணுவத் தளபதி ஆசிம் முனீர், உள்துறை மந்திரி மொசின் நக்வி ஆகியோர் வரவேற்றனர்.

ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு பங்கேற்கிறது. இதில் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப், அதிபர் டிரம்​பின் மரு​மகன் ஜெராட் குஷ்னர் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். மந்திரி குழுவினர் பாகிஸ்தானுக்கு சிறப்பு விமானத்தில் புறப்பட்டனர். அவர்கள் இன்று பாகிஸ்தானை வந்தடைகிறார்கள்.

அமெரிக்கா-ஈரான் குழுவினர் இடையேயான பேச்சுவார்த்தை இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஓட்டலில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பாகிஸ்​தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர், வெளி​யுறவு மந்திரி இஷாக்டார் ஆகியோர் சமாதான தூதர்களாக செயல்பட உள்​ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பினரும் தங்களது நிபந்தனைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். அமெரிக்கா 15 நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில், அதற்கு பதிலாக ஈரான் 10 நிபந்தனைகளை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் உடன்பாடு ஏற்பட்டு நிரந்தர போர் நிறுத்தம் வருமா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

பேச்சுவார்த்தையை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.