ஈரான் - அமெரிக்கா 2 வார போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ள நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஏப்ரல் 10 அன்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போரில் பாகிஸ்தான் வெளிப்படையான மதியசஸ்தராக அறியப்பட்டாலும் பின்னணியில் சீனாவின் பங்கு இருப்பது தெரியவந்துள்ளது.
ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திடம் பேசம்போது, ஈரானைப் பேச்சுவார்த்தைக்கு வரவழைப்பதில் சீனாவின் பங்கு இருந்ததா? என்ற கேள்விக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் "ஆம், கேள்விப்பட்டேன்" என்று பதிலளித்துள்ளார்.
2 வாரங்கள் போர் நிறுத்தத்தின்போது ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் தனது ராணுவத்தின் மேற்பார்வையுடன் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதாக கூறியுள்ளது. ஈரான் ஜலசந்தியை திறக்க சம்மதித்ததே போர் நிறுத்தத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
நேற்று இரவு, ஈரான் பொது கட்டமைப்புகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்று அச்சம் நிலவியது. ஒரு நாகரிகமே அழியப்போகிறது என டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.
ஆனால் நிலைமை தலைகீழாக மாறி போர் நிறுத்தம் ஏற்பட்டதற்கு ஈரானுடன் நெருக்கமான வர்ததக உறவுகளை கொண்டுள்ள சீனா அந்நாட்டுக்கு கொடுத்த அழுத்தமே ஹார்முஸ் ஜலசந்தி தாற்காலிக திறப்புக்கு காரணமாக அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு தீர்மானத்தைச் சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் தங்களது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தன.
ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற அந்தத் தீர்மானம், போரின் மூல காரணத்தைச் சரியாகக் கையாளவில்லை எனச் சீனா வாதிட்டது.
சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், "உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்தப் போரைத் தடுத்து நிறுத்த அனைத்துத் தரப்பினரும் நேர்மையுடன் செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.
இதற்கிடையே அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வரும் மே 14-15 ஆகிய தேதிகளில் சீனாவிற்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.