உலகம்

இந்தியர்கள் 3 பேர் பலி: அமெரிக்கா குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த ஈரான்

இந்திய கப்பல்கள் மீது ஈரான்தான் தாக்குதல் நடத்தியது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

ஓமன் கடற்பகுதியில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று கப்பல்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டன. இதில் கப்பலில் இருந்து 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உடல்கள் இந்தியா கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்திய கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது. இதனால் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரை அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.

இதற்கிடையே, இந்திய கப்பல்கள் மீது ஈரான்தான் தாக்குதல் நடத்தியது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், 3 இந்திய மாலுமிகள் பலியான சம்பவத்தில் தங்கள்மீது குற்றம்சாட்டிய அமெரிக்காவுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்தது.

இதுதொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியுள்ளதாவது:

3 இந்தியர்களின் உயிரைப் பறித்த இந்திய வணிகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் கொடூரமான தாக்குதல்கள், ஆயுதமேந்திய கொள்ளை மற்றும் அரசு ஆதரவிலான கடல்சார் கொள்ளைஆகியவற்றை உள்ளடக்கிய அமெரிக்காவின் தொடர்ச்சியான கொள்கைக்கு தெளிவான சான்றாக அமைந்துள்ளன.

கொல்லப்பட்ட இந்திய மாலுமிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய மக்களுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்து, கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் ஆபத்துக்கு உள்ளாக்கும் அமெரிக்காவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு, சர்வதேச சமூகம் அந்நாட்டைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.