அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை தொடர 7 நிபந்தனைகள் வைக்கிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையிலான கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது. பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டன. இதன் விளைவாக இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகிப்பதில் உடன்பாடு எட்டப்படாததால், போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் அமெரிக்கா மற்றும் ஈரான் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையே ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிக்குழு சவுதி அரேபியாவை தாக்க தொடங்கியுள்ளது. மத்திய கிழக்கு பகுதி முழுவதும் ஹவுதி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்கா- ஈரான் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உடன்பாடு எட்டப்பட்டால்தான் மத்திய கிழக்கு பகுதியில நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்கு ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது.
இது தொடர்பாக ஈரானின் உயரிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிப்பதாவது:-
எங்களுடைய செய்தி தெளிவானது. சந்தேகத்திற்கு இடமற்றது. அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இக்கட்டான சூழலிலிருந்து விடுபடவும், அதில் மேலும் சிக்கிக் கொள்வதை தவிர்க்கவும் விரும்பினால், ஈரானின் உரிமைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டுமென்றாலும் நாங்கள் நிபந்தனைகள் முன்வைக்கிறோம்.
இவ்வாறு மொஹ்சென் ரெசாய் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் 7 நிபந்தனைகள் என்ன? என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அதேவேளையில் ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்குமா? என்று தெரியவில்லை.