ஹார்முஸ் நீரிணை தொடர்பாக ஓமானுடன் ஒப்பந்தத்தை வரைவு செய்யும் 'இறுதிக் கட்டத்தில்' இருப்பதாக ஈரான் கூறியது. மேலும், இந்த வாரம் ஓர் ஒப்பந்தம் அறிவிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது, அந்த முக்கிய நீர்வழிப்பாதையை மீண்டும் திறக்கவும், உலக பொருளாதாரத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கவும், போரை முடிவுக்கு கொண்டுவர உதவவும் கூடும்.
ஆனால், ஈரான் துறைமுகங்கள் மீதான தனது முற்றுகையை அமெரிக்கா நீக்குவதை பொறுத்தே இந்த ஒப்பந்தம் அமையக்கூடும். நீரிணையின் மீதான ஈரானின் பிடியை வலுப்படுத்தும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் டிரம்ப் நிர்வாகம் முன்னரே நிராகரித்து இருந்தது; ஏனெனில் அது அமெரிக்காவிற்கு ஒரு பெரும் இழப்பாகவும், உலகளாவிய நெறிமுறைகளில் இருந்து விலகலாகவும் அமையும்.
போருக்கு முன்பு இருந்தது போல, அந்த நீர்வழிப்பாதை மீண்டும் ஒரு திறந்த சர்வதேச நீர்வழியாக மாறாது என்று கூறி, அதன் மீது ஓரளவு கட்டுப்பாட்டை ஈரான் வலியுறுத்தி வருகிறது.
தெஹ்ரான் அரசாங்கத்தை கவிழ்ப்பது மற்றும் அதன் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு இலக்குகளை காரணம் காட்டி, அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து பிப்ரவரி 28-ஆம் தேதியன்று போரை தொடங்கியது. அந்த இலக்குகள் அடையப்படாத நிலையில், ஈரான் தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவதாலும், கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களாலும் போக்குவரத்து கிட்டத்தட்ட முடங்கியுள்ளதால், இந்த மோதல் நீரிணைக்கான சண்டையாக மாறியுள்ளது.
ஒரு காலத்தில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வர்த்தகம் நடைபெற்ற நீரிணை மூடப்பட்டதால், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, உலக பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. மேலும், அமெரிக்க நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னதாக, மக்கள் விரும்பாத ஒரு போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அழுத்தமும் டிரம்ப் மீது அதிகரித்து வருகிறது.
ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, ஓமானுடனான ஒப்பந்தம் வரைவின் "இறுதிக் கட்டத்தில்" உள்ளது என்றும், "சில தரப்பினர் இந்த செயல்முறைக்குத் தடையாக இருக்காவிட்டால்" ஒரு கூட்டு அறிக்கை வெளியிடப்படும் என்றும் கூறினார்.
நீரிணையை மீண்டும் திறப்பதற்கான வரைவு ஒப்பந்தத்தை ஈரான் மற்றும் ஓமான் அதிகாரிகள் இறுதிசெய்துள்ளதாகவும், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா மொஜ்தபா கமெனியின் இறுதி ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் இரண்டு பிராந்திய அதிகாரிகள் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தனர். போரின் தொடக்க தாக்குதல்களில் கமெனி காயமடைந்ததாக நம்பப்படுகிறது, அன்றில் இருந்து அவர் பொதுவெளியில் காணப்படவில்லை.