உலகம்

Iran War | மற்றொரு அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஈரான்

மற்றொருவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து தீவிரமடைந்து வரும் போரில் முதல் சம்பவமாக, ஈரான் நேற்று (வெள்ளிக்கிழமை) அமெரிக்க போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது. இதனை இருநாட்டு அதிகாரிகளும் உறுதிப்படுத்தினர். மேலும், சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்த இருவரில், ஒருவரை அமெரிக்க பாதுகாப்பு படையினர் மீட்டதாகவும், மற்றொருவரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சத் ஆகியோர் தங்கள் படைகளுக்கு வான்வெளியில் முழுமையான கட்டுப்பாடு இருப்பதாக கூறினர். எனினும், ஈரானின் வான்பரப்பில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய விமானங்கள் இன்னும் எதிர்கொள்ளும் அபாயங்களை இந்த சம்பவம் சுட்டி காட்டியது.

இதற்கிடையில், இரண்டாவது அமெரிக்க விமானப்படை போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் A10 போர் விமானத்தை ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானம் வளைகுடா பகுதியில் விழுந்ததாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்க வட்டாரங்கள் இரு இருக்கைகள் கொண்ட F-15E ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறியதை அடுத்து, தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க ஹெலிகாப்டர்களை நோக்கி அப்பகுதி மக்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

தென்மேற்கு ஈரானில் விமானம் விழுந்த இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியைத் தாங்கள் சல்லடை போட்டுத் தேடி வருவதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறியதுடன், "எதிரி படைகளை" பிடிப்பவர்கள் அல்லது கொல்பவர்களுக்குப் பாராட்டு வழங்கப்படும் என்றும் பிராந்திய ஆளுநர் உறுதியளித்தார்.