உலகம்

துருக்கி, பாகிஸ்தான் உடனான "காகித ஒப்பந்தம்" சவுதிக்கு பாதுகாப்பை வழங்காது - ஈரான் அதிரடி!

ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் நாடாளுமன்றம், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கை ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர், பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கிக்கு இடையேயான புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை விமர்சித்துள்ளார். மேலும், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தாலும், அது ரியாத்துக்கு நீடித்த பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து இப்ராஹிம் ரெசாயி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அந்த பதிவில், "பல ஆண்டுகளாக அமெரிக்கர்களுக்கு ஒருதலைப்பட்சமாக ஆதரவளித்தது அவர்களுக்கு பாதுகாப்பை தராதது போலவே, துருக்கி மற்றும் பாகிஸ்தான் உடனான ஒரு காகித ஒப்பந்தம் அவர்களுக்கு பாதுகாப்பை தராது என்பதை சவுதியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு ஒப்பந்தம்:

சவுதி அரேபியா தனது கொள்கைகளை சீர்திருத்தினால், பாதுகாப்புக்காக மற்றவர்களிடம் 'யாசிக்க' வேண்டிய அவசியம் இருக்காது என்றும் அவர் கூறினார்.

முன்னதாக இன்று, அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்துவரும் போரின் பின்னணியில் பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், மூன்று நாடுகளும் "மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்" என்றழைக்கப்படும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இந்தப் போரானது, விருப்பமில்லாத வளைகுடா நாடுகளையும் உள்ளிழுத்து, ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாக செல்லும் கப்பல் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் அறிக்கை:

இஸ்லாத்தின் புனித நகரமும், நபிகள் நாயகம் முஹம்மது அவர்கள் பிறந்த இடமுமான மெக்காவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஒன்றின் மீதான தாக்குதல், அவை அனைத்து நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படும்.

"எந்தவொரு ஆக்கிரமிப்பு செயலுக்கும் எதிரான கூட்டு தடுப்பாற்றலை வலுப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மேலும், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒன்றின் மீதான எந்தவொரு ஆயுத தாக்குதலும், அவை அனைத்தின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்றும் இது குறிப்பிடுகிறது. அதுமட்டுமின்றி, மூன்று நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கும் இது வழிவகை செய்கிறது," என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.