ஹார்முஸ் ஜலசந்தியின் பிராந்திய கூட்டு மேலாண்மை குறித்த ஓமனின் முன்மொழிவை, ஈரான் நிராகரித்துவிட்டது என்று மூத்த ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது, பல மாதங்களாக வளைகுடா வர்த்தகத்தை முடக்கியுள்ள இந்தத் தேக்கநிலைக்கு ஒரு தீர்வு காண்பதற்கான நம்பிக்கைகளை தகர்த்துள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்குவதற்கு முன்பு, உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதை மீதான மோதலைத் தீர்க்கும் நோக்கில், ஓமன் ஒரு புதிய பிராந்திய ஒப்பந்தத்தை முன்மொழிந்தது.
இருப்பினும், ஜலசந்தியின் பிராந்திய கூட்டு மேலாண்மை குறித்த ஓமனின் முன்மொழிவுக்கு வெற்றிபெற வாய்ப்பில்லை என்று கூறி, ஈரான் அதனை நிராகரித்தது.
முக்கியத்துவம் வாய்ந்த அந்த நீர்வழிப்பாதை தொடர்பான தங்களின் நடைமுறைக்கு ஒவ்வாத திட்டங்களை முன்னெடுக்குமாறு, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஓமனுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிப்பதாக ஈரான் அதிகாரி தெரிவித்தார்.
அந்த நீர்வழிப்பாதை வழியாக உள்ளே மற்றும் வெளியே செல்லும் பாதையின் ஒரு பகுதியும், ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
இதுகுறித்து ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை கூறுகையில், “பாதுகாப்பற்ற மற்றும் சட்டவிரோதமான பாதையில் சென்றதாக விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததால், ஜலசந்தியில் மூன்று எண்ணெய் கப்பல்களைத் தங்கள் படைகள் தாக்கி நிறுத்தும்படி கட்டாயப்படுத்தியது.
அந்த முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையின் மீது முழுமையான கட்டுப்பாட்டைத் தொடர்ந்து பேணி வருவதாகவும், அப்பகுதியில் உள்ள கப்பல்களுக்கு வழங்கப்படும் சட்டவிரோத அமெரிக்க ராணுவத் தலையீடுகள் மற்றும் உத்தரவுகளுக்குப் பதிலடி கொடுக்கப்படாமல் விடப்படாது.
இதையடுத்து தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்ததால், புதன்கிழமையன்று எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 3 டாலருக்கும் மேல் உயர்ந்தது.
சவுதி எண்ணெய் கட்டமைப்புகள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு ஈரான் ஆதரவுக் குழுக்களே காரணம் என்று கூறி, அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் ஈராக்கில் அவர்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கின.
இதனைத் தொடர்ந்து, இதுபோன்ற தாக்குதல்களுக்குத் தன்னைக் குற்றம் சாட்டுவது ஒரு பெரும் தவறான கணிப்பு என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அப்பகுதியில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் நடத்திய திடீர் தாக்குதலைத் தனது வான் பாதுகாப்புப் படைகள் முறியடித்ததாக அமெரிக்க ராணுவம் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கிழக்கு ஈராக்கில் அமெரிக்க-சவுதி தாக்குதல்கள் நிகழ்ந்தன.
ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஐ.ஆர்.ஜி.சி கூறியது.
ஈரான் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ஒரு ஈரானிய பாதுகாப்பு அதிகாரி, பிற நாடுகளில் இருந்து சவுதி இலக்குகளை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கடுமையாக மறுத்தார்.
ஓமனின் முன்மொழிவின்படி, ஈரான் முழுமையான கட்டுப்பாட்டைச் செலுத்தாது என்றும், கட்டணங்கள் விருப்பத்தின் பேரிலானதாக இருக்கும் என்றும், வளைகுடா நாட்டு வட்டாரமும், இவ்விவகாரம் குறித்து விளக்கமளிக்கப்பட்ட மேற்கத்திய தூதரும் தெரிவித்தனர்.
இந்த அமைப்பு, ஆசியாவின் மலாக்கா ஜலசந்தியில் நடைமுறையில் உள்ள ஒரு முறையை ஒத்ததாக இருக்கும். அங்கு இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள், கப்பல் போக்குவரத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேடுதல்-மீட்பு நடவடிக்கைகளுக்கு நிதியளிப்பதற்காக, கப்பல்களிடம் இருந்து தன்னார்வப் பங்களிப்புகளைக் கோருகின்றன.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானைத் தாக்கியதைத் தொடர்ந்து, ஈரான் அந்த நீர்வழிப்பாதையை மூடியது.
கடந்த மாதம் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தம் அந்த நீர்வழிப்பாதையை திறந்தது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட பெரிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக எதிர்காலப் பேச்சுவார்த்தைகள் திட்டமிடப்பட்டிருந்தன.
ஆனால், தான் அங்கீகரிக்காத ஒரு கப்பல் வழித்தடத்தைப் பயன்படுத்திய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ஜூலை மாத தொடக்கத்தில் அந்த ஒப்பந்தம் முறிந்தது. அதனைத் தொட்ர்ந்து ஹார்முஸ் மீண்டும் மூடப்பட்டது.