உலகம்

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் சம்மதம்: இறுதி கட்டத்தை எட்டியது ஒப்பந்தம்..!

அமெரிக்கா- ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் சம்மதம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் அமெரிக்கா முன்மொழிந்துள்ள அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தன்னிடம் உள்ள சக்தி வாய்ந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை கைவிட ஈரான் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவும் ஈரானும் விரோதப் போக்கை முடிவுக்கு கொண்டு வரவும், சர்வதேச கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி எல்லையை மீண்டும் திறக்கவும் நெருங்கி வந்துள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அடுத்த 30 முதல் 60 நாட்களுக்குள் இந்த யுரேனியம் இருப்பை ஈரான் எப்படி ஒப்படைக்க அல்லது அழிக்க வேண்டும் என்பது குறித்த இறுதி கட்ட பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளர்.

ஈரானின் தற்போதைய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டின் எல்லையை விட்டு வெளியேற்றக் கூடாது என்று கடுமையான உத்தரவை பிறப்பித்திருந்தார். ஆனால், அமெரிக்காவின் ராணுவ அழுத்தத்திற்கு பணிந்து ஈரான் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளது.

சர்வதேச அணுசக்தி முகமையின்படி, ஈரானிடம் தற்போது 60% செறிவூட்டப்பட்ட சுமார் 400 கிலோகிராம் யுரேனியம் உள்ளது. இதை 90 சதவீதத்திற்கு செறிவூட்டப்பட்டால் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியும் என இஸ்ரேல் தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

ஈரான் இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், ஈரானின் இஸ்ஃபஹான் அணுமின் நிலையத்தின் நிலத்தடி அறைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள யுரேனியம் சேமிப்புக் கிடங்குகளை, 'பங்கர்-பஸ்டர்' குண்டுகள் மூலம் தகர்க்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.

ஒரு கட்டத்தில் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் கூட்டு கமாண்டோ படைகளை அனுப்பி, ஈரானின் யுரேனியத்தை அதிரடியாக கைப்பற்றவும் டிரம்ப் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதில் அதிக ஆபத்துக்கள் இருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

கடந்த 2015-ல் ஒபாமா ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தத்தைப் போல, ஈரான் தனது யுரேனியத்தை ரஷ்யாவிற்கு மாற்றிக் கொடுக்கலாம் அல்லது அதன் செறிவூட்டப்பட்ட தன்மையைக் குறைத்து ஆயுதங்களுக்குப் பயன்படுத்த முடியாதபடி வீரியத்தை அழிக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களை அமெரிக்கா விடுவிக்கும்.

இந்த நிதி ஈரானின் மறுசீரமைப்புப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் மூத்த தலைவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து, தற்போது 12 வாரங்களுக்குப் பிறகு இந்த அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.